தஞ்சையில் காவிரி பிரச்னைக்காக போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது: உயர் நீதிமன்ற உத்தரவால் வேறுவழியின்றி விடுதலை செய்தது தவெக அரசு
சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசியது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை சென்னை போலீஸ் உதவியுடன் தஞ்சை போலீசார் கைது செய்தனர். அவரை 10 மணி நேரம் அலைக்கழித்து வெயிலில் வேனில் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி விடுதலை செய்தனர். அவர் கைதான தகவல் காட்டுத்தீயாய் பரவிய நிலையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆங்காங்கே சாலைமறியல், போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
காவிரி விவகாரம் மற்றும் மேகதாது அணையை கட்ட கர்நாடகா முயற்சி எடுத்துவருவதைக் கண்டித்து திமுக சார்பில் நேற்று முன்தினம் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், திமுக இளைஞர் அணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். இந்த பேச்சு குறித்து, தவெக தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி, தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்தார். அதன்படி தஞ்சை கிழக்கு காவல் நிலைய போலீசார், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
நேற்று அதிகாலை தஞ்சை போலீசார் சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் சன்ரைஸ் அவென்யூ சந்திப்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு வந்தனர். தஞ்சை போலீசாருடன், தென் சென்னை இணை கமிஷனர் விஜயகுமார், அடையாறு துணை கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் வீட்டுக்குள் வந்தனர். அப்போது வீட்டில் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி இருந்தார். அவரிடம் தஞ்சை போலீசார் பேசினர். அதற்குள் திமுக நிர்வாகிகள் மத்தியில் தஞ்சை போலீசார் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு வந்த தகவல் தீயாக பரவியது.
உடனே உதயநிதி ஸ்டாலின் வீட்டின் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்தனர். திமுக அமைப்பு செயலாளர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் வக்கீல்கள் என்.ஆர்.இளங்கோ, பரந்தாமன், சரவணன் ஆகியோர் உதயநிதி வீட்டிற்கு விரைந்து வந்தனர். அவர்களை போலீசார் 100 மீட்டர் தொலைவில் உள்ள சன்ரைஸ் அவென்யூ அருகே தடுப்புகள் அமைத்து தடுத்தனர்.
அப்போது போலீசாருக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கே.என்.நேரு மற்றும் மா.சுப்பிரமணியனை போலீசார் உள்ளே செல்ல அனுமதி அளித்தனர். அதேநேரத்தில், போலீசார் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகாவிடம், காலை 8.30 மணிக்கே வந்துவிட்டோம். ஆனாலும் உதயநிதியை வெளியே அனுப்பவில்லை என கூறி உள்ளே நுழைய முயன்றனர். அதற்கு கிருத்திகா, ‘‘அவர் குளித்துக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் பொறுமையா இருங்கள்” என்றார்.
பின்னர் மா.சுப்பிரமணியனும், ‘அவர் காலை கடனை முடிக்க வேண்டாமா, தஞ்சாவூருக்கு அழைத்து செல்வதாக சொல்கிறீர்கள். இங்கிருந்து 7 மணி நேரம் ஆகும். அதுவரை அவர் காலை கடனை கழிக்காமல் அழைத்துச் செல்வது மனித உரிமை மீறல்’ என ஆவேசமாக தெரிவித்தார். அதன் பிறகு காரில் வந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. அப்போது அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்கள் போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் மேலும், சாலையின் குறுக்கை போடப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி உள்ளே செல்ல முயன்றனர்.
இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக துரைமுருகனை போலீசார் உள்ளே செல்ல அனுமதி அளித்தனர். இருந்தாலும் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய போலீசார் வந்த தகவலை தொடர்ந்து நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
இதற்கிடையே சென்னை தெற்கு மண்டல போலீஸ் கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர், இணை கமிஷனர் விஜயகுமார், அடையாறு துணை கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் அவரது மனைவி கிருத்திகா மற்றும் சபரீசன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு முன்னாள் திமுக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பைப் தெரிவித்தனர். சட்டப்பூர்வமான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கும்போது, அரசியல் உள்நோக்கத்தோடு அவசர அவசரமாக கைது செய்ய முனைவது நியாயமற்றது என்று அவர்கள் அதிகாரிகளிடம் காரசாரமாக வாதிட்டனர். இதனால் நீலாங்கரை இல்லத்திற்கு வெளியே நீண்ட நேரமாக பதற்றமான சூழல் நீடித்தது.
அதேநேரம் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் அருகே திமுக தொண்டர்களை உள்ளே விடாமல் தடுப்பதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேரடியாக அதிரடிப்படையுடன் அங்கு வந்தார். சென்னை போலீஸ் வரலாற்றில் ஒரு கட்சியின் முக்கிய தலைவரை கைது செய்ய போலீஸ் கமிஷனரே இதுவரை வந்தது இல்லை. இதுதான் முதல்முறை. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். உதயநிதி ஸ்டாலின் வீட்டருகே யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. நீலாங்கரை மெயின் ரோட்டில் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். அருகில் உள்ள தெருக்கள் வழியாகவும் யாரும் உள்ளே நுழையாத வகையில் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர்.
இதையடுத்து திமுக தொடண்ர்கள் அனைவரும் நீலாங்கரை மெயின் ரோட்டில் அமர்ந்து காவல்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீலாங்கரை பகுதி முழுவதும் பதற்றமான நிலை ஏற்பட்டது. அப்போது, முன்னாள் எம்எல்ஏ பிரபாகர ராஜா தலைமையில் மற்றொரு பகுதியில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போராட்டத்தில் திமுகவினருடன் பொதுமக்களும் கலந்துகொண்டதால் நிலைமை மோசமானது.
அதைதொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து பேருந்துகளில் ஏற்றினர். போலீசார் திமுகவினரை கைது செய்யும் போது கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது தடுப்புகளை உடைத்துக் கொண்டு திமுகவினர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை நோக்கி செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை கயிறு மற்றும் இரும்பு தடுப்புகள் அமைத்து தடுத்தனர்.
அப்போதும் திமுகவினர் முன்னேறி செல்ல முயன்றனர். இதில் பலர் கீழே விழுந்து காயமடைந்தனர். உடனே போலீசார் அனைவரையும் கைது செய்து வேன் மற்றும் பேருந்துகளில் அழைத்து சென்றனர். நிலைமை மோசமானதை தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் சம்பவ இடத்திற்கு வந்து, திமுக மூத்த நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தாலும் திமுக நிர்வாகிகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதற்கிடையே, தஞ்சை போலீசார் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் ஆகியோர் உதயநிதி ஸ்டாலினிடம் கைது செய்வதற்கான வாரன்டை காட்டினர். அப்போது வழக்கறிஞர்கள் வரும் வரை காத்திருக்கும்படி உதயநிதி தரப்பு கேட்டுக் கொண்ட நிலையில், கைது நடவடிக்கையை தடுக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அதை ஏற்று வழக்கை அவசரமாக விசாரிக்க ஒப்புக்கொண்ட நீதிபதிகள், மதியம் 12 மணி வரை உதயநிதி ஸ்டாலினை கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டனர். பிற்பகலில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் எனவும் தெரிவித்தனர்.
எனவே, மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, நீதிமன்றம் அவரை கைது செய்ய தடை உத்தரவு வழங்கியிருப்பதாக தெரிவித்தார். ஆனால் இணை கமிஷனர் விஜயகுமார், மேல் அதிகாரிகளிடம் கேட்டு விட்டு வருவதாக தெரிவித்தார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் பேசினார். அமல்ராஜ் உத்தரவை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவு கையில் இல்லை. உங்களை கைது செய்யும்படி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதனால் எங்களுடன் வாருங்கள், ஒத்துழைப்பு கொடுங்கள் என்று தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தனர்.
நீங்கள் அரசு வக்கீலிடம் கேளுங்கள். அவர் இல்லை என்று மறுத்தால், உங்களுடன் வருகிறோம் என்று உதயநிதி தெரிவித்தார். ஆனால் போலீசார் அவரை வேனில் ஏற்றிச் செல்வதிலேயே குறியாக இருந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரத்தில், உதயநிதி ஸ்டாலின் தன்னிடம் வழங்கிய வழக்குப் பதிவு விவர நகலை முழுமையாக படித்தார். அதைதொடர்ந்து கைதுக்கு ஒப்புக் கொண்டார். பின்னர் போலீசார் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டு அவரது வீட்டில் இருந்து வெளியே வந்தனர்.
அப்போது சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்தும், தவெக அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியப்படி அவரை ஏற்றி செல்லும் வாகனத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். உதயநிதியை அழைத்து சென்ற வாகனம் அவரது வீட்டில் இருந்து சன்ரைஸ் அவென்யூ பகுதியை கடந்து செல்ல முடியாதபடி திமுகவினர் சாலையில் படுத்தபடி வாகனத்தை செல்ல விடாமல் தடுத்தனர்.
ஒரு கட்டத்தில் தொண்டர்களின் மறியலையும் மீறி போலீசார் உதயநிதி ஸ்டாலினை அழைத்து சென்றனர். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் பரந்தாமன், உதவியாளர் செந்தில், வக்கீல் சரவணன் உள்ளிட்டோர் வேனில் பயணித்தனர். உதயநிதி ஸ்டாலினை போலீசார் வேன் மூலம் தஞ்சைக்கு அழைத்து சென்றனர். அப்போது பின்னால் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் காரில் சென்றனர். இந்த சம்பவத்தால் நீலாங்கரை பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேல் பதற்றமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழல் எழுந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இன்று தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க உள்ள நிலையில், அதில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூர் கிழக்கு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்படுவதாக இருந்தது. ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால், திருச்சி எல்லையில் உள்ள செங்கிப்பட்டி காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். இரவு 8.15 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விடுவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து வெளியில் வந்தவருக்கு, போலீஸ் நிலையம் முன்பு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அழித்தனர். அவர் காரில் ஏறி, ரோடுஷோவாக சென்றார். பின்னர் திருச்சி வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்தார். சென்னை விமான நிலையத்திலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
* கடைகளை மூட உத்தரவிட்ட போலீசார்
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய போலீசார் வந்தனர். அப்போது எப்படியும் திமுக தொண்டர்கள் அதிகளவில் வருவார்கள் என்று சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார் மற்றும் அடையாறு துணை கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் உத்தரவுப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலாங்கரை பகுதியில் சன்ரைஸ் அவென்யூ பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. சன்ரைஸ் அவென்யூ முதல் உதயநிதி ஸ்டாலின் வீடு வரை போலீசார் கயிறு மற்றும் தடுப்புகள் அமைத்து யாரும் உள்ளே செல்லாதபடி தடை விதித்தனர். மேலும், சன்ரைஸ் அவென்யூ பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவிர்த்தனர்.
* என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்
என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி:
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என ஆர்ப்பாட்டத்தில் பேசினேன். டம்மி முதல்வருக்கு ரீல்ஸ் வெறி முற்றிப் போய் உள்ளது. முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ரீல்ஸ் வெறியில் உள்ளனர். நான் பேசாத ஒன்றை பேசியதாக கட், காப்பி, பேஸ்ட் பண்ணி பொய் செய்தி பரப்புகின்றனர். என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன். இதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் கிடையாது. திமுகவின் கடைசி தொண்டன் கூட கைதுக்கு பயப்படுபவர்கள் கிடையாது. சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த கேள்விகளுக்கும் பதில் கிடையாது. காவிரி விவகாரத்தில் தவெக அரசின் தோல்வியை திசை திருப்ப என் மீது அவதூறு பரப்பி கைது செய்துள்ளனர். சட்டப்பேரவையில் நான் பங்கேற்பதை தடுக்கவே என்னை கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வேன். இவ்வாறு அவர் பேசினார்.
* உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது தவெக தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவை தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின்படி, தஞ்சை கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் உதயநிதி ஸ்டாலின் மீது பிஎஸ்என் மதம், இனம், மொழி அல்லது சாதி அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை தூண்டுவது (196), கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒருவரை வேண்டுமென்றே ஆத்திரமூட்டுவது (192), பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் (352), பெண்களின் மானம் மற்றும் மரியாதைக்கு அவமரியாதை விளைவித்தல் (79), பொது இடங்களில் ஆபாசமான வார்த்தைகளை பேசுவது (296(பி)), குற்றவியல் சதி (61) மற்றும் குற்றவியல் மிரட்டல் (351(2)) மற்றும் தமிழ்நாடு ெபண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப தடுப்பு சட்டம், இணையம் அல்லது மின்னணு வடிவில் அருவருப்பான அல்லது காமுகத்தன்மையான தகவல்கள் வெளியிடுதல் (67) ஆகிய 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யதுள்ளனர்.
* திமுக தொண்டரைதாக்கிய போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சை போலீசார் கைது செய்து வேனில் அவரது வீட்டில் இருந்து அழைத்து செல்லும் போது, திமுக தொண்டர்கள் வாகனத்தை தடுக்கும் வகையில் சாலையின் இடையே போடப்பட்ட தடுப்புகளை கீழே தள்ளி உள்ளே சென்றனர். அப்போது திமுக தொண்டர் ஒருவர் சாலையின் இடையே இருந்த பேரிகார்டு மீது ஏறி குதித்தப்படி சென்றார். அப்போது பின்னால் வந்த சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ‘சட்டென்று தனது இரண்டு கைகளால் ஓங்கி திமுக தொண்டர் முதுகில் அடித்தார்.
இதை எதிர்பார்க்காத அந்த நபர், திரும்பி முறைத்தார். அப்போது கமிஷனர் என்ன என்று கேள்வி கேட்டு முறைத்தபடி சென்றார். அதோடு இல்லாமல் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து அழைத்து சென்ற வாகனத்தை முற்றுகையிட முயன்ற திமுக தொண்டர்களை கமிஷனர் அமல்ராஜ் போலீசாருடன் இணைந்து ஆயுதப்படை காவலர்கள் போன்று அடித்து அவரே வாகனத்தில் ஏற்றினார். இந்த காட்சிகள் அனைத்தும் தற்போது இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாக பரவி வருகிறது.
* மண்டையை உடைத்த போலீசார் ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் பரவியதை தொடர்ந்து திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக நீலாங்கரை வீட்டின் அருகே ஒன்று கூடினர். அப்போது உதயநிதி ஸ்டாலினை பேருந்தில் போலீசார் ஏற்று செல்வதை பார்த்த திமுக தொண்டர்கள் பார்த்து அவரை நோக்கி ஓடினர். போலீஸ் வாகனத்தின் முன்பு படுத்துக் கொண்டனர். இதையடுத்து போலீசார் ஒவ்வொருவரையாக விலக்கிவிட்டனர். அப்போது போலீசார் திமுகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸ் அராஜகம் ஒழிக, காவல் துறை அடக்குமுறை ஒழிக என கூச்சலிட்டனர்.
அவர்களை விரட்டியடிக்கும் வகையில் போலீசார் அங்கிருந்த திமுக தொண்டர்களை காலால் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தினர். இதில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கீழே விழுந்தார். அப்போது நெரிசலில் சிக்கிக்கொண்டார். பிறகு உதயநிதி ஸ்டாலின் வாகனம் சென்றதும் கீழே விழுந்த ஆட்டோ டிரைவரை தூக்கிய போது, அவருக்கு மண்டை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. போலீசார் நடத்திய தாக்குதலில் மற்றொருவரும் காயமடைந்தார். அவர்களை அங்கிருந்த மற்ற திமுகவினர் மீட்டு ரத்தம் சொட்ட ெசாட்ட அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் இருவரையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனையில் இருந்த சோழிங்கநல்லூர் முன்னாள் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷின் செல்போனுக்கு அழைத்து பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு நல்லதொரு சிகிச்சையை கொடுக்க சொல்லுங்கள் என்றும் தெரிவித்தார்.
* 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது
தஞ்சை போலீசார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை நேற்று சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலாங்கரை பகுதியில் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் பேருந்தில் ஏற்றி சென்று 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள திருமண மண்டபங்களில் அடைத்தனர். அவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு கூட கொடுக்காமல் போலீசார் கெடுபிடி காட்டியது குறிப்பிடத்தக்கது.
* டெல்லி வரை எதிரொலித்த உதயநிதி கைது
சென்னை நீலாங்கரை இல்லத்தில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து காவல் வாகனத்தில் போலீசார் தஞ்சைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் தான் உதயநிதியின் கைது நடவடிக்கை டெல்லி வரை எதிரொலித்தது. டெல்லியில் தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் பங்கேற்று வருகின்றனர். உதயநிதி கைதான தகவல் அறிந்தவுடன் திமுகவின் நாடாளுமன்ற, மாநிலங்களவை எம்பிக்கள் உடனடியாக நாடாளுமன்ற வளாகத்தில் திரண்டு கைது செய்யாதே கைது செய்யாதே என்று கோஷமிட்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். அதன்பிறகு மாநிலங்களவைக்குள் திமுக எம்பிக்கள் சென்றனர். அங்கும் உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து நாடாளுமன்றம் நேற்று மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
* உதயநிதி ஸ்டாலின் கைதை செல்போனில் வீடியோ எடுத்தமுதல்வர் விஜய் நண்பர் சஞ்சீவ்
தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது வீட்டின் அருகே குடியிருக்கும் முதல்வர் விஜய் நண்பரும் சின்னத்திரை நடிகருமான சஞ்சீவ் வசித்து வருகிறார். அப்போது, உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன் திரண்டிருந்த ஆதரவாளர்கள், காவல் துறையினரின் வாகனங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அமைச்சர்கள் இடையே நடந்த வாக்குவாதங்கள் என அனைத்து பரபரப்பான சூழல்களையும் நடிகர் சஞ்சீவ் தனது வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு திமுகவினரை ஆத்திரமூட்டும் வகையில் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த திமுகவினர் சிலர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இருந்தாலும், அவர் திமுகவினரின் எதிர்ப்பை மீறி தனது செல்போனில் உதயநிதி ஸ்டாலினை வீடியோ எடுத்தபடி இருந்தார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பொதுமக்கள் பலர் சின்னத்திரை நடிகர் சஞ்சீவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
