Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமாகா கட்சிக்காக பெறப்பட்ட நன்கொடை விவர அறிக்கையை ஏற்க கோரி ஜி.கே.வாசன் வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கட்சி நன்கொடை குறித்து தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்க கோரி தமாகா கட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் மாநில கட்சி சார்பில் கடந்த 2018-19, 2019-20 ஆகிய நிதியாண்டுகளில் நன்கொடை குறித்த அறிக்கை தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த இரு நிதியாண்டுகளுக்கும் வருமான வரிவிலக்கு வழங்க மறுத்த வருமான வரித்துறை முறையே 66.76 லட்சம் ரூபாயும், 1.07 கோடி ரூபாயும் செலுத்துமாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதன் காரணமாக 2018-19 மற்றும் 2019-20 நிதியாண்டுகளில் பெற்ற நன்கொடை குறித்து தாமதமாக அளித்த அறிக்கையை ஏற்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், சட்டப்படி தாமதத்தை ஏற்க முடியாது எனக்கூறி விண்ணப்பத்தை நிராகரித்து தேர்தல் ஆணையம் மே 13ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்து நன்கொடை, குறித்த அறிக்கையை ஏற்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செந்தில்குமார் ராமமூர்த்தி, தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்தல் ஆணையம் இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.