தலசீமியா பாதித்த 5 குழந்தைகளுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்திய கொடூரம்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூமின் மாவட்டத்தின் சாய்பாசாவில் உள்ள உள்ளூர் ரத்த வங்கியில் தலசீமியா பாதித்த குழந்தைகளுக்கு ரத்த மாற்றம் செய்யப்பட்டு வந்தது. தலசீமியா என்பது ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தியில் ஏற்படும் மரபணு கோளாறு. உடலில் போதுமான ஹீமோகுளோபின் உற்பத்தி செய்ய முடியாது. இதனால் இந்த நோய் பாதித்த குழந்தைகளுக்கு ரத்தம் மாற்றம் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்படி தலசீமியா பாதித்த 5 குழந்தைகளுக்கு சாய்பாசா ரத்த வங்கியில் சமீபத்தில் ரத்த மாற்றம் செய்துள்ளனர்.
அதன் பிறகு அவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் 5 பேர் கொண்ட மருத்துவ குழு விசாரணை நடத்தி, ரத்த வங்கி ஊழியர்கள் கவனக்குறைவாக எச்ஐவி பாதித்த ரத்தத்தை 5 குழந்தைகளுக்கு செலுத்தியது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து, ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ் குமார் கங்க்வார் நேற்று நடந்த மாநில உதய தின விழாவில் பேசுகையில், ‘‘ரத்த மாற்ற வழக்கில் தவறுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் வெறுமே பணி இடைநீக்கம் செய்யப்படக் கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கும் அளவுக்கு வலுவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்றார்.