Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தைலாபுரத்துக்காரர் இலை, நடிகர் கட்சியில் சேர முடியாமல் பனையூர் மகன் கொடுத்த நெருக்கடி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘யூனியனில் துறைகளின் கெடுபிடியால் ‘பாட்ஷா’ சொந்தங்கள் ரொம்பவே கலக்கத்தில் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘சுற்றுலாவுக்கு பெயர்போன புதுச்சேரியில் ஆட்டோ கட்டணம் தாறுமாறாக வசூலிக்கப்பட்டதாம்.. இதுதொடர்பாக ஆதாரங்களுடன் மேலிடத்துக்கு புகார்கள் செல்ல முதல்கட்ட நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடமிருந்து உத்தரவு பறந்திருக்கு.. அதன்பேரில் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் நகராட்சி இறங்கிட்டாங்களாம்.. அனுமதி பெறாமல் ஆங்காங்கே இடத்தை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள ஸ்டாண்டுகளை உடனே ஒழுங்குபடுத்தணும், இல்லாவிடில் அகற்றப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாம்..

அடுத்ததாக போக்குவரத்து துறை மூலம் ஸ்டாண்ட் வாரியாக அதிகாரிகள் திடீர் விசிட் அடித்து ஆவணங்களை சரிபார்க்க முடிவெடுத்து உள்ளார்களாம்.. ஆங்காங்கே சோதனைகளை கெடுபிடியாக்க திட்டமிட்டு இருப்பதால் ‘பாட்ஷா’வின் யூனியன் சொந்தங்கள் கலக்கத்தில் இருக்காங்களாம்..’’ என்றார் நம்ம விக்கியானந்தா.

‘‘காக்கி உயர் அதிகாரியின் பேச்சை கேட்டு மயங்கி விழுந்துட்டாராமே த்ரி ஸ்டார் காக்கி..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கடைகோடி மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட காவல் உட்கோட்டத்தில் உயர் அதிகாரி ஒருவர் புதிதாக வந்த நகரப் பகுதி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஒருவரை அவதூறாகவும், மிகவும் அருவருப்பாகவும் பேசிவிட்டாராம்.. இதனால் காவல் ஆய்வாளருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி மயங்கி கீழே விழுந்துட்டாராம்.. அருகே மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் மூன்று மணி நேரமாக மயக்கமுற்று ஆபத்தான நிலையில் இருந்ததால் மாவட்ட காக்கி முக்கிய அதிகாரிக்கு தகவல் சென்றிருக்கு.. அவர் நேரடியாக களமிறங்கி காவல் ஆய்வாளரை திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாம்.. மேற்படி உயர் அதிகாரி தனக்கு கீழ் உள்ள பலரையும் மனம் நோகும்படி தற்கொலைக்கு தூண்டும் அளவில் பேசி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கு.. மேலும் சட்ட விரோதமாக கடத்தப்படும் கனிமவள வாகனங்கள் மீது வழக்கு போட முயற்சித்தால் உட்கோட்ட உயர் அதிகாரி அதனை செய்ய விடுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் வாசிக்கிறார்களாம்.. தற்போதைய காவல் ஆய்வாளர் உட்கோட்ட உயர் அதிகாரிக்கு ஒத்துப்போக வில்லை என்பதால் ஏற்பட்ட கோபமே இதற்கு காரணம் என்கின்றனர் சக காக்கிகள்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தலைவி ஓய்வெடுக்க கொடநாடு சென்றதை போல இலைக்கட்சி தலைவர் ஓய்வெடுக்க பிரமாண்ட பங்களா ரெடியாகுதாமே..’’ என வியப்போடு கேட்டார் பீட்டர் மாமா.

‘‘பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தின் பிரபலமான சுற்றுலாத்தலமான மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் ஊரில், பல முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு என தனியாக பங்களாக்கள் உள்ளன. அந்த வகையில் தனக்கும் ஒரு பங்களா இருக்க வேண்டும் என்பது சேலத்துக்காரரின் நீண்டநாள் ஆசை. இதனால், தனது பினாமிகள் மூலம் அப்சர்வேட்டரி பகுதியில் ஒரு ஏக்கருக்கும் மேலான நிலத்தை பல கோடி கொடுத்து வாங்கியுள்ளாராம்.. இந்த நிலத்தில் பங்களாவிற்கான கட்டுமானப் பணிகள் கிட்டதட்ட முடியும் நிலைக்கு வந்து விட்டது. பணிகள் முடிந்ததும் நல்லநாள் பார்த்து பால் காய்ச்ச திட்டமிட்டுள்ளாராம்.. தங்கள் தலைவி ஓய்வெடுக்க கொடநாடு செல்வதைப் போல, சேலத்துக்காரர் ஓய்வெடுக்க மலைகளின் இளவரசிக்கு வரவேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாம்.. இதற்கு ஏற்ப பங்களாவிற்குள் நடப்பதை யாரும் அவ்வளவு சுலபமாக அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு கோட்டை போன்ற அளவிற்கு பிரமாண்ட சுற்றுச்சுவர்களும் கட்டப்பட்டு வருகிறதாம்.. குறிப்பாக ஹெலிகாப்டர் மூலம் வந்து, செல்லும் அளவிற்கு தேவையான வசதிகள் இங்கு செய்யப்பட்டு வருகிறதாம்.. இதனால், சேலத்துக்காரரின் பங்களா ஆசை விரைவில் நிறைவேறும் என அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தைலாபுரத்துக்காரரிடம் பேச்சுவார்த்தைக்கு முயன்ற இலைக்கட்சி தலைவரை ஷாக்காக்கிட்டாராமே பனையூர்க்காரர்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘தைலாபுர தோட்டத்து தந்தையும், பனையூர் மகனும் தேர்தலில், கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி கொடுக்கும் பெரும் துட்டை பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாகத்தான் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது என பரவலாக பேசப்பட்டு வருது.. ஆனால் துட்டுக்காக இந்த சண்டை இல்லவே இல்லை என மகனின் ஆதரவாளர்கள் அடிச்சி சொல்றாங்க.. ரெண்டுபேரும் பிரிந்து கட்சி எங்களுக்கு தான் என போர் தொடுத்துள்ள நிலையில், மகன் தன் மீதுள்ள ஊழல் வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக தான் மலராத கட்சியுடன் ஓடிப்போய் சேர்ந்துக்கிட்டதாக சொல்றாங்க.. ஆனால் இதில் தந்தை தரப்பினர் எங்கு போவது என தவித்துக் கிட்டிருக்கும் நிலையில், நடிகர் கட்சியில் சேர்ந்திடலாம் என்ற திட்டத்தையும் வச்சிருந்திருக்காரு... அருகில் நெருங்கி செல்லும் நேரத்தில் இதனை ரகசியமாக தெரிந்துக்கிட்ட மகன், நடிகரிடம் இருக்கும் சிலிப்பர் செல்லை தொடர்பு கொண்டு, உள்ளே விட்டிட கூடாதுன்னு நெருக்கடி கொடுத்தாராம்.. இதனால அங்கு நடக்க இருந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிஞ்சிப்போச்சாம்.. அதே நேரத்தில் இலைக்கட்சி தலைவரு, பனையூர் மகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம்.. கொடுக்க வேண்டிய பசையோடு தந்தையையும் சேர்த்துக்கிடலாமான்னு கேட்டாராம்.. சட்டென்று கோபம் அடைந்த மகனோ, கட்சியின் தலைவர் நான் தான், எதுவாக இருந்தாலும் என்னோடு முடித்துக்கொள்ள வேண்டும்.. எந்தவிதமான பணமும் வேண்டாமுன்னு சொல்லிட்டாராம்.. இதனை கேட்டதும் இலைக்கட்சி தலைவர் தனக்கு தானே கிள்ளிப்பார்த்துக்கிட்டாராம்.. இச்சம்பவத்தை உறுதிப்படுத்தும் பனையூராரின் தம்பிகள், பணம் எங்களது குறிக்கோள் அல்ல என அடிச்சி சொல்றாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.