சென்னை: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் கடந்த 30ம் தேதி நள்ளிரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி, சுற்றுலாவிசாவில் தாய்லாந்து சென்று விட்டு, இந்த விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்தார்.
சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோது கேள்விகளுக்கு சரிவர பதிலளிக்கவில்லை. இதையடுத்து அவருடைய உடைமைகளை சோதித்தனர். உடைமைகளில் எதுவும் இல்லை. சந்தேகம் தீராமல் அந்த பயணியை தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை களைந்து, முழுமையாக பரிசோதித்த போது, அவருடைய உள்ளாடைக்குள் சிறிய சிலிண்டர் வடிவிலான மூன்று உருளைகளை மறைத்து வைத்திருந்தார்.
அதிகாரிகள் அதை எடுத்து திறந்து பார்த்தனர். அதனுள் 24 கேரட் சுத்தமான தங்க பசை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் சுமார் முக்கால் கிலோ சுத்தமான தங்க பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.90 லட்சம். இதை தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் தங்கபசையை பறிமுதல் செய்து, கடத்தல் பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
* மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் நேற்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது சென்னையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள், மலேசியாவிற்கு சுற்றுலா பயணிகளாக சென்று விட்டு திரும்பி வந்தனர். இருவரின் உடைமைகளிலும் இருந்து 820 கிராம் தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். இவை 24 கேரட் சுத்தமான தங்கம் என்று தெரிய வந்தது. இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூபாய் ஒரு கோடி. சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர்.
