Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தாய்லாந்தின் பிரபல மதுபான பாரில் குடித்த ‘சரக்குக்கு’ பணம் தராததால் இளம்பெண்ணை மொட்டையடித்து அராஜகம்

பாங்காக்: தாய்லாந்தில் பார் கட்டணத்தை செலுத்த முடியாத இளம்பெண்ணின் தலையை மொட்டையடித்து அராஜகத்தில் ஈடுபட்ட பார் ஊழியரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் பிங்க்லாவோ பகுதியில் உள்ள பிரபல மதுபான பாருக்கு கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி போலி அடையாள அட்டையை காண்பித்து இளம்பெண் (18) ஒருவர் சென்றுள்ளார். அங்கு அவர் மதுபானம் அருந்தி உணவு உட்கொண்டதில் பில் தொகை சுமார் 60,000 தாய் பாத் (தோராயமாக 1,800 அமெரிக்க டாலர்) வரை உயர்ந்துள்ளது. ஆனால், அந்த பெரும் கட்டண தொகையை செலுத்தாமல் அப்பெண் அங்கிருந்து வெளியேற முயன்றதாக கூறப்படுகிறது.

இதனை கவனித்து ஆத்திரமடைந்த பார் ஊழியர்கள், சம்பவம் குறித்து போலீசார் வசம் புகார் அளிக்காமல் தாங்களே சட்டத்தை கையில் எடுத்தனர். மேலும், கட்டண பாக்கிக்காக அந்த பெண்ணின் தலைமுடியை விற்கும் ஒப்பந்தத்தில் அவரை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்து, எலக்ட்ரிக் ‘ரேசர்’ மூலம் தலையை முழுமையாக மொட்டையடித்தனர். அப்போது வீடியோ எடுத்த நபர், ‘நாங்கள் உன்னை ஏமாற்றவில்லை, தலைமுடிக்கு உரிய சந்தை விலையை பில் தொகையில் கழிக்கிறோம்’ என்று பேசியுள்ளார். இந்த கொடூர வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, தாய்லாந்து சமூக மேம்பாடு மற்றும் மனித பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.