Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சோதனை அடிப்படையில் ரேஷன் கடைகளில் அமல் பி.ஓ.எஸ் கருவியுடன் மின்னணு தராசு இணைப்பு:முறைகேடுகளை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை: உணவு பொருட்கள் எடைக்கு ஏற்றார்போல் பில் போடும் வசதி

சென்னை: ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் விதமாக பிஓஎஸ் கருவியுடன் மின்னணு தராசு இணைக்கும் நடைமுறை சென்னையில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 26 ஆயிரத்து 618 முழுநேர கடைகள், 10 ஆயிரத்து 710 பகுதிநேர கடைகள் என மொத்தம் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் மலிவு விலையில் அரிசி, சர்க்கரை, பருப்பு போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக 2 கோடி அட்டை தாரர்கள் பயன்பெறுகின்றனர்.

நியாய விலை கடைகளில் வாங்கப்படும் பொருட்கள் சரியான எடையில் இல்லை என்பதை பிரதான குற்றச்சாட்டாக குடும்ப அட்டைதாரர்கள் முன்வைத்து வந்தனர். குறிப்பாக, சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் சர்க்கரை கிலோ கணக்கில் குறைந்த எடையுடன் தரப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணமாக இருந்தன.இதனையடுத்து, ரேஷன் பொருட்களை பாக்கெட் போட்டு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அரசிடம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன.

ஆனால் பாக்கெட் போட்டால் சரக்கு மற்றும் சேவை வரி சேரும் என்பதால் தமிழக அரசு அந்த திட்டத்தை கைவிட்டது. இருப்பினும் இதற்கு தீர்வு காணும் வகையில் அண்மையில் ஒரு புதிய நடைமுறை அமல்படுத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ். என்னும் மின்னணு கருவி மூலம் பொருட்கள் வினியோகத்திற்கான ரசீது வழங்கப்பட்டு வருகிறது. இந்த மின்னணு இயந்திரத்தில் ரேஷன் அட்டை உறுப்பினர்கள் கைரேகை வைத்தால் மட்டுமே ரசீது போடும் வகையில் பிஓஎஸ் கருவியின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த கருவியுடன் மின்னணு தராசும் இணைக்கப்பட்டு சோதனை அடிப்படையில் சில ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ரேஷன் கடைகளில் எடை குறைவாக உணவு தானியங்கள் வழங்குவதை தடுப்பதற்காகவே மின்னணு எடை தராசானது, வைபை - புளூடூத் வாயிலாக பிஓஎஸ் கருவியுடன் இணைக்கும் அறிவிப்பை, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வழங்கி இருந்தார். இதன் மூலம், ஊழியர் தராசில் வைக்கும் பொருளின் எடை தான், அந்த கருவியில் பதிவாகும்.

அதன்படி, திருப்பத்துார், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, சென்னை வடக்கு, அரியலுார், மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் இந்த நடைமுறையை பின்பற்ற மே.30ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல், விருதுநகர், நாமக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவாரூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், சென்னை தெற்கு, வேலுார், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கரூர் மாவட்டங்களில் ஜூன் மாதம் 5ம் தேதி வரையும், மற்ற மாவட்டங்களில் ஜூன் 20ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது.

தற்போது, முதற்கட்டமாக சென்னையில் சில ரேஷன் கடைகளில் இந்த நடைமுறையை அமல்படுத்தி உள்ளோம். இனி பொருட்கள் எடை எந்தளவுக்கு வைக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு தான் பில்லும் வரும். எனவே சரியான எடைக்கு பொருட்கள் வைக்க வேண்டிய கட்டாயம் ரேஷன் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதில் எடை குறைவாகவோ, கூடவோ வைக்க முடியாது. இந்த நடைமுறையை விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.