Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

2வது டெஸ்டின் கடைசி நாளில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

கொழும்பு: இலங்கை அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், கடைசி நாளான இன்று இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கை வசம் 4 விக்கெட் மட்டுமே இருக்க, 2வது இன்னிங்சில் இலங்கை 16 ரன் முன்னிலை பெற்றுள்ளது. சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 503 ரன் குவித்து (படிக்கல் 117, ஜுரெல் 115*, பன்ட் 63, கில் 50, ஜெய்ஸ்வால் 45) டிக்ளேர் செய்தது.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 3ம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்திருந்தது (சூரியபண்டாரா 80). சோனல் தினுஷா 85 ரன், லாகிரு குமாரா 8 ரன்னுடன் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். லாகிரு 12 ரன்னில் வெளியேற, உறுதியுடன் போராடி சதம் அடித்த தினுஷா 103 ரன் எடுத்து (162 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) சரண்ஷ் ஜெயின் பந்துவீச்சில் ராகுல் வசம் பிடிபட்டார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 290 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அசிதா பெர்னாண்டோ 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய பந்துவீச்சில் பிரசித், சுதர் தலா 3, சரண்ஷ் ஜெயின் 2, சிராஜ், ஜடேஜா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 213 ரன் பின் தங்கிய நிலையில் , ஃபாலோ ஆன் பெற்ற இலங்கை 2வது இன்னிங்சையும் தொடர்ந்து விளையாடியது. தொடக்க வீரர் லாகிரு உதரா 3 ரன் எடுத்து சிராஜ் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். கமில் மிஷரா சூரிய பண்டாரா இணைந்து 2வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்தனர்.

மிஷரா 32 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் ஆட்டமிழக்க, சூரியபண்டாரா கமிந்து மெண்டிஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி 115 ரன் சேர்த்து இலங்கை அணிக்கு நம்பிக்கை அளித்தது. பொறுப்புடன் விளையாடிய இருவரும் அரை சதம் அடித்தனர். கமிந்து 55 ரன் எடுத்து (92 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) பிரசித் வேகத்தில் கில் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் தனஞ்ஜெயா டிசில்வா 23 ரன், சூரியபண்டாரா 92 ரன் (173 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி மானவ் சுதர் பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட்டாக, ஆட்டம் முழுமையாக இந்திய அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 2வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்துள்ளது. சோனல் தினுஷா 7, கேஷரா நுவந்தா 3 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

இந்திய பந்துவீச்சில் சுதர் 2, சிராஜ், பிரசித், ஜெயின், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 4 விக்கெட் இருக்க, இலங்கை அணி 16 ரன் மட்டுமே முன்னிலை பெற்றுள்ள நிலையில், இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா மிக எளிதாக வெற்றியை வசப்படுத்தி 2-0 என தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.