Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

2வது டெஸ்டை டிரா செய்தது இலங்கை: இந்தியா ஏமாற்றம்: தினுஷா 133* ரன் விளாசி அசத்தல்

கொழும்பு: இந்திய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில், சோனல் தினுஷாவின் அபார சதத்தால் 9 விக்கெட் இழப்புக்கு 429 ரன் குவித்து டிக்ளேர் செய்த இலங்கை அணி டிரா செய்து அசத்தியது. 2 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-0 என கைப்பற்றியது. சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 503 ரன் குவித்து டிக்ளேர் செய்த நிலையில், இலங்கை 290 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து, ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்திருந்தது. சோனல் தினுஷா 7 ரன், கேஷரா நுவந்தா 3 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். எஞ்சிய 4 விக்கெட்டையும் இந்தியா விரைவாகக் கைப்பற்றி வெற்றியை வசப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தினுஷா - நுவந்தா ஜோடி பொறுப்புடன் பொறுமையாக விளையாடி, இந்திய வீரர்களின் பொறுமையை சோதித்தது.

இருவரும் 7வது விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்து அசத்தினர். நுவந்தா 46 ரன் (150 பந்து, 4 பவுண்டரி) எடுத்து சுதர் பந்துவீச்சில் ஜுரெல் வசம் பிடிபட்டார். இதனால் உற்சாகமான இந்திய வீரர்கள், இலங்கையின் பின்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். பிரபாத் ஜெயசூரியா 28 பந்தில் 2 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் ஜுரெல் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, இந்தியா வெற்றியை நெருங்கியதாக உணர்ந்தது. ஆனால், 9வது விக்கெட்டுக்கு தினுஷாவுடன் ஜோடி சேர்ந்த லாகிரு குமாரா தற்காப்பு ஆட்டத்தில் அமர்க்களப்படுத்தினார்.

மறு முனையில், இந்த தொடர் முழுவதுமே இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக விளங்கிய தினுஷா, கடைசி இன்னிங்சிலும் கலக்கலாக விளையாடி சதம் அடித்தார். 90 பந்துகள் தாக்குப்பிடித்து 12 ரன் எடுத்த குமாரா, ஜடேஜா சுழலில் ஜெய்ஸ்வால் வசம் பிடிபட்டார். அதன் பிறகும் இலங்கையின் போராட்டம் முடிவுக்கு வருவதாக இல்லை. கடைசி விக்கெட்டுக்கு தினுஷாவுடன் இணைந்த அசிதா பெர்னாண்டோ தனக்கும் டிஃபென்ஸ் தெரியும் என்பதை வெளிச்சமிட்டு காட்டினார்.

இலங்கை அணி 154 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 429 ரன் குவித்த நிலையில், 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. சோனல் தினுஷா 133 ரன் (264 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), அசிதா பெர்னாண்டோ (24 பந்தில் 0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் சுதர், ஜடேஜா தலா 3, பிரசித், சிராஜ், ஜெயின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இலங்கை அணி 216 ரன் முன்னிலை பெற்றிருந்ததால், அத்துடன் ஆட்டத்தை முடித்துக்கொள்ள இரு அணி கேப்டன்களும் ஒப்புக்கொண்டதை அடுத்து கொழும்பு டெஸ்ட் டிராவில் முடிந்தது.

தோல்வியின் பிடியில் இருந்து கடுமையாகப் போராடி மீண்ட இலங்கை அணி, ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளியது. இந்திய அணிக்கும் வெற்றிக்கும் நடுவே பெருஞ்சுவராய் உயர்ந்து நின்ற சோனல் தினுஷா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்திய வீரர் படிக்கல் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். மொத்தம் 2 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-0 என கைப்பற்றியது.

* இலங்கை அணி ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய 27 போட்டிகளில் 24ல் தோற்றிருந்த நிலையில், கொழும்பு டெஸ்ட் போட்டியை கடுமையாகப் போராடி டிரா செய்துள்ளது. முன்னதாக ஜிம்பாப்வே (1994), இங்கிலாந்து (2006), வெஸ்ட் இண்டீஸ் (2010) அணிகளுக்கு எதிராக அந்த அணி டிரா செய்திருந்தது.

* ஃபாலோ ஆன் பெற்ற டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்சிலும் சதம் விளாசிய 3வது வீரர் என்ற சாதனை இலங்கையின் சோனல் தினுஷாவுக்கு (103 மற்றும் 133*) கிடைத்துள்ளது. முன்னதாக, ஜிம்பாப்வே வீரர் ஆண்டி ஃபிளவர் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 142 ரன் மற்றும் 199* ரன் (ஹராரே, 2001), இந்தியாவின் விஜய் ஹசாரே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 116 ரன் மற்றும் 145 ரன் (அடிலெய்டு, 1948) எடுத்துள்ளனர்.