Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் வங்கதேசம் 64, ஆஸ்திரேலியா 165/8: ஸ்டார்க், ஷோரிபுல் விக்கெட் வேட்டை

மெக்கே: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், வங்கதேசம் 64 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முதல் நாள் முடிவில் ஆஸி. 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்துள்ளது. வேகப் பந்துவீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், ஷோரிபுல் இஸ்லாம் தலா 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினர். ஆஸ்திரேலியா சென்றுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

டார்வின் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் வங்கதேசம் 9 விக்கெட் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச… மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேப்டன் பேட் கம்மின்சின் துல்லியமான வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வங்கதேச அணி 34 ஓவரில் வெறும் 64 மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது.

கடைசி வீரராகக் களமிறங்கிய ஷோரிபுல் இஸ்லாம் அதிகபட்சமாக 14 ரன் எடுத்தார். மிராஸ், தைஜுல்* தலா 11 ரன், ஹசன் மகமூத் 10 ரன் எடுக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர் (3 பேர் டக் அவுட்). ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஸ்டார்க் 10 ஓவரில் 6 மெய்டன் உள்பட 12 ரன்னுக்கு 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். கம்மின்ஸ் 3, ஹேசல்வுட் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவும் அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி. 40 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்துள்ளது. ஸ்மித் 42, ஹெட் 22 ரன் எடுக்க, மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர் (2 பேர் டக் அவுட்). கிரீன் 51 ரன், நாதன் லயன் 10 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

31 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்திருந்த ஆஸி. மேற்கொண்டு 3 ரன்னுக்கு அடுத்த 4 விக்கெட்டையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. வங்கதேச பந்துவீச்சில் ஷோரிபுல் இஸ்லாம் 11 ஓவரில் 2 மெய்டன் உள்பட 35 ரன்னுக்கு 6 விக்கெட் சாய்த்தார். தஸ்கின், மிராஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் நாளிலேயே 18 விக்கெட் சரிந்த நிலையில், இன்று பரபரப்பான 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.