சொந்த மண்ணில் அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்கள் ஒயிட்வாஷ்; இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கம்பீர் நீக்கமா..? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு
மும்பை: இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் என்றால், வெளிநாடு வீரார்கள் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்க்கொள்ளவே பயந்தனர். ஆனால், இன்றோ இந்திய அணி வீரர்கள் வெளிநாட்டு சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து டெஸ்ட் தொடரை பறிகொடுத்து வருகின்றனர். இதனால், இந்திய கிரிக்கெட் அணி 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் வீறுநடை போட்ட அந்த மகத்தான பயணம் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்தியா வந்த நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதைத்தொடர்ந்து, ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. அடுத்த இங்கிலாந்துடன் 2-2 என்று டிராவில் முடிந்தது. தற்போது, இந்தியாவில் தென் ஆப்ரிக்காவுடன் 0-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, ரவிச்சந்திர அஸ்வின், புஜாரா, ரஹானே போன்ற வீரர்களை டெஸ்ட் தொடரில் இருந்து தேர்வர்கள் ஓரம்கட்டியதால் அடுத்தடுத்து அவர்கள் ஓய்வை அளித்தனர். மூத்த வீரர்கள் இல்லாத இளம் டெஸ்ட் அணியினருக்கு பொறுமையாகவும், திறமையாகவும் ஆடிய ஸ்கோர் எடுக்க முடியாமல், டி20 போட்டிகள் போல் வந்த வேகத்தில் அவுட்டாக பெவிலியன் திரும்புகின்றனர்.
குறிப்பாக, கடந்த 13 மாதங்களில் இந்தியா சொந்த மண்ணில் ஆடிய 2 டெஸ்ட் தொடரில் ஒபிட்வாஷ் ஆகி உள்ளது. கடைசியாக ஆடிய 7 டெஸ்டில் 5ம் தோல்வி அடைந்து உள்ளது. கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் 19 டெஸ்டில் ஆடி 10ல் தோல்வி, 7ல் வெற்றி பெற்று உள்ளது. 2 போட்டி டிராவில் முடிந்து உள்ளது. கம்பீர் பொறுப்பேற்ற பின் இந்திய அணி மோசமான தோல்விகளை சந்திந்து வருகிறது. குறிப்பாக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை எதிரணியினர் பதிவு செய்து வருகின்றனர். இதனால் இந்திய அணியின் முன்னணி வீரர்கள், பயிற்சியாளர் கம்பீர் மீதும், வீரர்கள் மீதும் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் பங்கேற்காததே இந்திய டெஸ்ட் போட்டிகளில் தோல்விக்கு முக்கிய காரணம் என்று குற்றம்சாட்டினர். அதேநேரத்தில் கம்பீர் தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பையை வென்று உள்ளதால், கம்பீருக்கு ஆதரவாக சுனில் கவாஸ்கர் பேசி உள்ளார்.
தென் ஆப்ரிக்காவிடம் டெஸ்ட் தொடரை இழந்த பின் கம்பீர் நிருபர்களிடம் கூறுகையில், ‘எனது எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டியது இந்திய கிரிக்கெட் அணி வாரியம்தான். நான் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றபோது, இந்திய கிரிக்கெட் தான் முக்கியம். நான் முக்கியமல்ல என்று சொன்னேன். இப்போது இங்கும் அதையேத் தான் சொல்கிறேன். தோல்விக்கு ஒரு நபர் மட்டும் பொறுப்பு அல்ல. எல்லோரும் பொறுப்பு’ என்றார். இதனால், கம்பீர் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு வி.வி.எஸ்.லட்சுமணன் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியானது.
இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘பயிற்சியாளர் விவகாரத்தில் எந்த ஒரு அவசர முடிவையும் எடுக்க பிசிசிஐ விரும்பவில்லை. இப்போதைய சூழ்நிலையில் கம்பீருக்கு மாற்றாக வேறு யாரும் நியமிக்கப்பட வாய்ப்பு இல்லை. அவர் அணியை மறுசீரமைப்பு செய்தவர். கம்பீரின் ஒப்பந்தம் 2027 உலக கோப்பை வரை இருக்கிறது. தென்ஆப்பிரிக்க தொடர் முடிந்த பிறகு அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் டெஸ்ட் அணி தேர்வு குறித்து கம்பீரிடம் விளக்கம் கேட்கப்படும்’ என்றார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதில் சிக்கல்
இந்திய அணியின் தொடர் தோல்வியால் ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறுவதில் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்கா தொடருக்கு முன்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி 61.90% புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்தது. இப்போது, 48.15% புள்ளிகளுடன் 5ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்கா 75% புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், 100% புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் உள்ளது.
இந்திய அணிக்கு இன்னும் 9 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. இதில் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தலா 2 டெஸ்ட், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் உள்ளன. இந்த 3 தொடரில், குறைந்தபட்சம் 7ல் வெற்றி பெற்றால்தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு வெற்றி பெற முடியும் என்ற நெருக்கடியில் இந்திய அணி உள்ளது.
கம்பீர் டவுன்...டவுன்... ரசிகர்கள் கோஷம்: ஒருவர் கைது
கவுகாத்தியில் தென் ஆப்ரிக்காவுடனான போட்டி முடிந்த பிறகு பரிசளிப்பு விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது, ‘கம்பீர் டவுன்...டவுன்...’ என ரசிகர்கள் கோஷமிட்டனர். அதனை கம்பீர் கண்டுகொள்ளாமல் இருந்தார். இதனை பார்த்த இந்திய வேகபந்து வீச்சாளர் முகமது சிராஜ், ‘கோஷம் போட வேண்டாம். அமைதியாக இருங்கள்’ என வாயில் விரல் வைத்து சைகை காட்டினார். இருப்பினும் கம்பீருக்கு எதிரான கோஷங்கள் ஓயவில்லை. இதுகுறித்து இந்திய அணி நிர்வாகிகள் மைதானத்தில் இருந்த போலீசாரிடம் புகார் செய்தனர். அதையேற்று கொண்ட போலீசார், முழக்கத்திற்கு முக்கிய காராணமாக இருந்த நபரை கைது செய்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மன்னிப்பு கேட்ட பண்ட்
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்திய ரிஷப் பண்ட் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாடவில்லை என்பதை கூற எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஒரு அணியாக நாங்கள் எப்போதும் சிறப்பாக செயல்படவும், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவும் விரும்புகிறோம். இந்த முறை அவர்களின் எதிர்பார்ப்புகளை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எங்கள் வாழ்வின் மிகப்பெரிய மரியாதை. ஒரு வலுவான அணியாக கம்பேக் கொடுக்க நாங்கள் கடினமாக உழைப்போம். உங்கள் அசைக்க முடியாத ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி’ என்று கூறி உள்ளார்.