Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததால் ஏற்கனவே ஓமனில் தடை விதிக்கப்பட்ட விமானியை பணியில் சேர்த்தது ஏன்?: பிளைதுபாய் நிறுவனத்திடம் தீவிர விசாரணை

துபாய்: இஸ்ரேல் பயணிகளுடன் சென்ற விமானத்தை நடுவானில் மோதி தகர்க்க முயன்ற தீவிரவாத துணை விமானிக்கு ஏற்கனவே ஓமனில் தடை விதிக்கப்பட்ட திடுக்கிடும் தகவல் அம்பலமாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கி 174 பயணிகளுடன் போயிங் 737 ரக ‘பிளைதுபாய்’ விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தை இயக்கிய கேப்டன் ஸ்மித் மச்சார் என்பவரை, தீவிரவாத எண்ணம் கொண்ட துணை விமானி கொடூரமாக கத்தியால் குத்தி சாய்த்தான். பின்னர் விமானத்தை தரையில் மோதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் நோக்கில், வெறும் 30 வினாடிகளில் சுமார் 14,000 அடி (4,267 மீட்டர்) அளவுக்கு விமானத்தை செங்குத்தாக கீழே பாயச் செய்தான்.

ரத்த வெள்ளத்தில் துடித்த கேப்டன் சாமர்த்தியமாக ‘காக்பிட்’ கதவை திறக்கவே, உள்ளே பாய்ந்த பயணிகள் அந்த துணை விமானியை மடக்கிப் பிடித்து கயிற்றால் கட்டிப் போட்டனர். இதையடுத்து மாற்று விமானிகள் மூலம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு நூற்றுக்கணக்கான அப்பாவிப் பயணிகளின் உயிர்கள் நல்வாய்ப்பாக காப்பாற்றப்பட்டன. இந்த பயங்கர சதித்திட்டம் தொடர்பாக பிடிபட்ட அந்த துணை விமானியிடம் அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தினர். அதில், அவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததால், அவருக்கு ஓமன் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்கனவே விமானம் ஓட்ட தடை விதித்திருந்த உண்மை தெரியவந்தது. குறிப்பாக கடந்த 2024ம் ஆண்டு அவனிடம் தீவிரவாத ஆவணங்கள் சிக்கியதால் அவன் பயிற்சியில் இருந்து நீக்கப்பட்டதும் அம்பலமானது.

அத்தகைய ஆபத்தான தீவிரவாதியை கடந்த 8 மாதங்களாக பணியில் அமர்த்தி இஸ்ரேல் வழித்தடத்தில் பறக்க விட்ட பிளைதுபாய் நிர்வாகத்தின் அலட்சியம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின் போது, ‘விமானத்தை இஸ்ரேல் நாட்டிற்குள் மோதி பெரும் நாசவேலையை ஏற்படுத்தவே திட்டமிட்டேன்’ என்று அந்த கொடூரன் வாக்குமூலம் அளித்துள்ளான். இதுகுறித்து பிளைதுபாய் நிறுவன தலைமை செயல் அதிகாரி கைத் அல் கைத் கூறுகையில், ‘விமானத்தில் நடந்த சம்பவத்தின் உண்மைகளை வெளிக்கொண்டு வர அதிகாரப்பூர்வ விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது’ என்று தெரிவித்தார். இந்த தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

‘இது தீவிரவாத தாக்குதல் முயற்சி’அமீரக அதிபரின் ஆலோசகர் ஒப்புதல்;

இந்திய பைலட் ஸ்மித் மச்சார் காட்டிய இணையற்ற துணிச்சலை பாராட்டியுள்ள ஐக்கிய அரபு அமீரக அதிபரின் ஆலோசகர் அன்வர் கர்காஷ், செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘இது ஒரு தீவிரவாத தாக்குதல் முயற்சி’ என்று முதன்முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளதோடு, தீவிரவாதத்தை எதிர்கொள்ள அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே, தாக்குதல் நடத்திய துணை பைலட்டுக்கு பின்னணியில் யாராவது உள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும்’ என்று எச்சரித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மீது சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில், பிடிபட்ட துணை விமானியிடம் அமீரக மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் கூட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.