ஸ்ரீநகர்: டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு தீவிரவாதி உமர் முகமதுவின் வீடு வெடி வைத்து தகர்க்கப்பட்டது. டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த 10ம் தேதி கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், 13 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான விசாரணையில், வெடிபொருளுடன் கூடிய அந்த காரை காஷ்மீர், புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் முகமது நபி(35) ஓட்டி வந்தது தெரியவந்தது. வெடித்த காரில் இருந்து சேகரிக்கப்பட்ட உடற்பாகங்கள் மற்றும் உமரின் தாயாரிடம் சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரியை பகுப்பாய்வு செய்ததில் அந்த இரண்டும் ஒத்துப்போவது உறுதியானது. இதனடிப்படையில் காரை உமர் முகமது ஓட்டி வந்தது உறுதி செய்யப்பட்டது. இவர், காஷ்மீர், அரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் குழுவில் முக்கிய நபராக இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், இந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டாக்டர் உமர் முகமது நபியின் வீட்டை பாதுகாப்புப் படையினர் நேற்று அதிரடியாக வெடிவைத்துத் தகர்த்தனர். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த வீடு வெடிகுண்டு (ஐ.இ.டி.) மூலம் தகர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
