பெங்களூரு: இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான ரோகன் போபண்ணா தொழில்முறை போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். கர்நாடகாவை சேர்ந்த 45 வயதான போபண்ணா இரட்டையர் பிரிவில் 2 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
ரோகன் போபண்ணா ஏறத்தாழ 22 ஆண்டுகளாக பல்வேறு டென்னிஸ் தொடர்களில் விளையாடியுள்ளார். இறுதியாககடந்த ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் Matt Ebden உடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரை கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச அளவில் அதிக வயதில் கிராண்டஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை ரோகன் போபண்ணா படைத்தார். மேலும் 2023ம் ஆண்டு மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரை சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற சாதனையை போபண்ணா படைத்திருந்தார்.
அதேபோல், 2017ல் பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ரோகன் போபண்ணா, இரட்டையர் தரவரிசையில் அதிக வயதில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் வீரர் என்ற மைல்கல்லையும் அடைந்தார்.
இந்நிலையில் ஏறத்தாழ 22 ஆண்டுகள் டென்னிஸ் வாழ்கையில் இருந்து விடைபெறுவதாக ரோகன் போபண்ணா அறிவித்துள்ளார். 'இத்தனை ஆண்டுகளில் தனக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள், சக போட்டியாளர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி. நான் வாழ்க்கையை இழந்து போராடும் போது கைதூக்கிவிட்டது டென்னிஸ்தான். தன்னை சந்தேகித்தவர்களிடம் திறமையை நிரூபிக்க அது காரணமாக அமைந்தது' என போபண்ணா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
