திருநெல்வேலி: ரத்து செய்யப்பட்ட டெண்டர் மீண்டும் வெளியிடப்பட்டதால் திருநெல்வேலி மாநகராட்சியில் புதிய சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 1.20 கோடி ரூபாயில் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் முறையான கட்டுமானம் இல்லாததால், கட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டதால் மக்களின் மருத்துவ பயன்பாட்டுக்கு வராமல் உள்ள நிலையில் அதே கட்டடத்துக்கு கூடுதலாக, 53.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து புதிய டெண்டர் விடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து எழுந்த புகாரில், அப்போதைய திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் மோனிகா ரானா, முறையாக கட்டுமான பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்ததாரருக்கு, 6 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, செப்ட. 29 உத்தரவிட்டார்.
இதற்கிடையே, மோனிகா ரானா அக். 29ல் தென்காசி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையராக கே.பிரியா பொறுப்பேற்க சில நாட்கள் ஆனது. இந்த இடைப்பட்ட காலத்தில், ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின், 52.50 லட்சம் டெண்டர் பணியை, அக்.15 என முன் தேதியிட்டு, மீண்டும் வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏற்பட்ட புகாரின் அடிப்படியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், மாநகராட்சி அதிகாரிகளிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார். தற்போது புதிய கமிஷனராக பொறுப்பேற்றுள்ள கே. பிரியா, ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ள திட்டங்களை அமல்படுத்துவதா அல்லது விசாரணைக்கு பிறகு செயல்படுத்துவதா என்ற குழப்பமான சூழல் நிலவுவதாக தெரிய வருகிறது.
மாநகராட்சியில் டெண்டர் நடைமுறைகள், அவசரகால விதி பயன்பாடு மற்றும் கட்டுமான பணிகளின் நிலை குறித்து விரிவான விசாரணை நடத்தினால், பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 1.20 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கட்டடம் விரிசல் காரணமாக பயன்பாட்டிற்கு வராத நிலையில் அதே திட்டத்திற்கு மீண்டும் ரூ. 53.50 லட்சம் ஒதுக்கீடு செய்து டெண்டர் வெளியிட விவகாரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.


