கோயில் தூணை கட்டிப்பிடித்து கோஹ்லி வேண்டுதல்
விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது. இந்த தொடரில் நட்சத்திர வீரரான விராத் கோஹ்லி இரண்டு சதம், ஒரு அரை சதம் அடித்து, 3 போட்டிகளில் மொத்தம் 302 ரன்கள் அடித்து அசத்தினார். இதனால் கோஹ்லிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. தற்போது நல்ல பார்மில் இருப்பதால் 2027ல் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பையில் விளையாட கோஹ்லி திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் அதற்கு பயிற்சியாளர் கம்பீர் முட்டுக்கட்டை போடும் விதமாக செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கோஹ்லிக்கும், கம்பீருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பனிப்போர் நிலவுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றவுடன் கோஹ்லி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விசாகப்பட்டினத்தில் உள்ள வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அப்போது வெள்ளை நிற ஆடையுடன் கோயிலுக்கு வந்த கோஹ்லிக்கு துண்டு அணிவிக்கப்பட்டு கோயில் நிர்வாகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து கோயிலுக்குள் சென்ற கோஹ்லி நரசிம்மரை வழிபட்டார். அப்போது அங்கிருந்த பூசாரிகள், கோயில் தூண் ஒன்றை கட்டிப்பிடித்து, நீங்கள் மனதில் நினைக்கும் காரியத்தை வேண்டினால் நிச்சயம் கைகூடும் என்று கோஹ்லியிடம் கூறினர்.
இதையடுத்து கோயில் தூணை கட்டிபிடித்த கோஹ்லி, மனதார சில வினாடிகள் வேண்டுதல் செய்தார். அதன்பின் பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு கோயிலில் இருந்து புறப்பட்டார். கோஹ்லி உடன் அவரது குடும்பத்தினர் சிலரும் கோயிலுக்கு வந்திருந்தனர். கோஹ்லி அடுத்ததாக விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு ஜனவரி மாதத்தில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோஹ்லி பங்கு பெறுவார் என தெரிகிறது.