திருப்புவனம் அருகே 10 பவுன் நகை கொள்ளை போன விவகாரம் விசாரணையில் கோயில் ஊழியர் சாவு 6 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
திருப்புவனம்: திருப்புவனம் அருகே போலீஸ் விசாரணையின் போது கோயில் ஊழியர் மர்மமாக இறந்த சம்பவத்தில், விசாரணை நடத்திய 6 போலீசாரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உடலை வாங்க மறுத்த உறவினர்கள் 6 போலீசாரையும் கைது செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த சிவகாமி (73) தனது மகள் நிகிதா(48) உடன் கடந்த வெள்ளிக்கிழமை காரில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தார். காரில் சிவகாமியின் 10 பவுன் நகைகளை பர்சுடன் கட்டைப் பையில் துணிகளுக்கு அடியில் வைத்துள்ளார். கோயில் வாசலில் சிவகாமிக்கு வீல் சேர் தேவைப்படுவதாக நிகிதா கேட்கவே தற்காலிக ஊழியர் அஜித்குமார் (27) வீல்சேர் கொண்டு வந்தார். சிவகாமி வீல் சேரில் ஏறிய உடன் கோயிலுக்குள் சென்றனர். அப்போது நிகிதா கார் சாவியை அஜித்குமாரிடம் கொடுத்து பார்க்கிங் செய்து விட்டு வருமாறு கூறியுள்ளார். காரை பார்க்கிங் செய்து விட்டு, அஜித்குமார் சாவியை ஒப்படைத்துள்ளார். கோயிலுக்கு சென்று விட்டு நிகிதா காரை எடுத்த போது, பர்சில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகளும் மாயமாகி இருந்தது. இதுகுறித்து மானாமதுரை குற்றப்பிரிவு போலீசில் நிகிதா புகார் அளித்தார்.
இதுபற்றி விசாரிக்க போலீசார் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமாரை வேனில் ஏற்றி சென்றனர். காலை முதல் மாலை வரை விசாரித்ததோடு, பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றனர். பின்னர் கோயில் நிர்வாக அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள மாடுகள் கட்டப்படும் பகுதியில் அஜித்குமாரை போலீசார் கட்டி வைத்து விசாரித்ததாகவும், அப்போது அவர் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக அவரை வேனில் ஏற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து இரவு 12 மணி வரை போலீசார் உறவினர்களுக்கு தெரிவிக்கவில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவு உறவினர்கள் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். சிவகங்கை எஸ்பி ஆஷிஷ் ராவத், ஏடிஎஸ்பி சுகுமார் ஆகியோர் திருப்புவனம் காவல்நிலையத்தில், போலீசாரிடம் விசாரணை செய்தனர். இரவு 11 மணி அளவில் அஜித்குமார் குறித்து எஸ்.பியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘இப்போது எதுவும் கூற முடியாது. வெளியே காத்திருங்கள்’’ என்றார். நள்ளிரவு தான் அஜித்குமார் இறந்து விட்டதாகவும், உடல் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ளதாகவும் உறவினர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மானாமதுரை குற்றப்பிரிவு போலீஸ் தலைமை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்தன், மணிகண்டன் ஆகிய 6 பேரை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று காலையில் இருந்து மடப்புரம் கிராமத்தில் கடைகளை அடைத்து பொதுமக்கள் மந்தையில் ஒன்று கூடினர். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை அஜித்குமாரின் உடலை வாங்க மாட்டோம் என கூறினர். எஸ்பி ஆஷிஷ் ராவத், ஆர்டிஓ விஜயகுமார் உள்ளிட்டோர் உறவினர்களிடம் சமரசம் பேசினர். இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு மடப்புரம் கோயிலில் அரசு நிரந்தர வேலை வழங்கப்படும். நிவாரண நிதி குறித்து அரசுக்கு தெரிவித்து பெற்று தரப்படும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாலை 4 மணியளவில் அஜித்குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீன் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீசாரால் அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் சிலர் சம்பவத்தில் தொடர்புடைய ஆறு போலீசாரையும் கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். சமரசம் செய்ய அஜித்குமாரின் குடும்பத்தாரை அழைத்து சென்றபோது, அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அதிமுகவினர், பாஜ, நாம் தமிழர் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


