கோயில் காவலாளிகளை கொன்ற குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்: எஸ்ஐயை அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்றபோது இன்ஸ்பெக்டர் அதிரடி
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் எஸ்ஐயை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த சிவன் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு 10ம் தேதி இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்த தேவதானத்தை சேர்ந்த சங்கரபாண்டியன் (65), கோவிலூரை சேர்ந்த பேச்சிமுத்து (50) ஆகியோரை மர்மநபர்கள் வெட்டிக் கொன்று, உண்டியல் பணம், சுவாமி நகைகளை கொள்ளையடித்து சென்றனர். கோயிலில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்துவிட்டு ஹார்ட் டிஸ்க்கையும் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
சந்தேகத்தின்பேரில் தேவதானம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (25) என்பவரை நேற்று முன்தினம் இரவு பிடித்து விசாரித்தனர். இதில், அவரும், அதே ஊரை சேர்ந்த முனியாண்டி (30) என்பவரும் சேர்ந்து கோயில் காவலாளிகளை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது. மேலும், கொள்ளையடித்த பொருட்களை, சேத்தூரை அடுத்த கல்லணை ஆஞ்சநேயர் கோயில் அருகே பதுக்கி வைத்திருப்பதாக நாகராஜ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த பொருட்களை எடுப்பதற்காக சேத்தூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா, எஸ்ஐ கோட்டைச்சாமி மற்றும் போலீசார், நாகராஜை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு நேற்று காலை கல்லணை பகுதிக்குச் சென்றனர். பொருட்களை புதைத்து வைத்த இடத்திற்கு சென்றவுடன் திடீரென நாகராஜ், அப்பகுதியில் வைத்திருந்த அரிவாளை எடுத்து திடீரென எஸ்ஐ கோட்டைச்சாமியின் தோளில் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றார்.
இதைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா, நாகராஜின் வலது காலில் சுட்டு அவரை பிடித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. படுகாயமடைந்த எஸ்ஐ கோட்டைச்சாமி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நாகராஜ் ஆகியோர் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விருதுநகர் எஸ்பி கண்ணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான முனியாண்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
* கொலையும் செஞ்சிட்டு போலீசிடமும் நியாயம் கேட்ட குற்றவாளி
காவலாளிகளை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்த நாகராஜ், போலீசார் ஊரில் வந்து விசாரணை நடத்தியபோது ஒன்றும் தெரியாததுபோல் நாடமாடியுள்ளார். குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, ‘எங்களுக்கு நீதி வேணும்... இல்லேன்னா பஸ் மறியல் பண்ணுவோம்’ என்று நாகராஜ் ஆவேசமாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் உடல்களை ஆம்புலன்சில் ஏற்ற உதவியதோடு, அதிலேயே மருத்துவமனைக்கும் பயணித்து சென்றுள்ளார். இறந்தவர்கள் இவருக்கு சொந்தம் இல்லாத நிலையில் சம்பந்தமே இல்லாமல் ‘அய்யய்யோ மாமா போயிட்டாரே, அந்த நல்ல மனுசனுக்கு இப்படி ஒரு சாவா...’ என்று அடிக்கடி புலம்பி வந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போலீசிடம் சிக்கிய ஒரு சிசிடிவி வீடியோவில் நாகராஜை போன்ற நபர் கோயிலுக்குள் ஏறி குதிப்பது போன்ற காட்சி இருந்தது. இதையடுத்து நாகராஜை பிடித்து தங்கள் பாணியில் விசாரித்தனர். இதில் உண்மைகள் அனைத்தும் வெளியானது.
