Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தெலுங்கு படவுலகிலும் பாலியல் தொல்லை விசாரணை அறிக்கை வெளியிட வேண்டும்: சமந்தா கோரிக்கை

சென்னை: புதுப்பட வாய்ப்பு பெறுவது மற்றும் படப்பிடிப்புகளில் பணியாற்றுவது தொடர்பாக, கேரளாவில் மலையாள நடிகைகள் மீது மலையாள நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ள நிலையில், மலையாளப் படவுலகில் நடக்கும் பாலியல் விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு ஏற்கனவே புகார் தெரிவித்த சில நடிகைகளை நேரில் சந்தித்துப் பேசியும், போன் மூலமாகப் பேசியும் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்தது. மலையாள நடிகர்கள் முகேஷ், சித்திக், ஜெயசூர்யா, மலையாள இயக்குனர்கள் ரஞ்சித், வி.கே.பிரகாஷ் உள்பட 9 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இதை முன்னணி நடிகை சமந்தா வரவேற்று தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், ‘தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பெண்களாகிய நாங்கள் ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறோம். இதுபோலவே தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு ஆதரவாக, ‘வாய்ஸ் ஆப் வுமன்’ என்ற அமைப்பு கடந்த 2019ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மலையாளப் படவுலகைப் போலவே தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணையின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று, தெலங்கானா அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் அமையும்’ என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

“கடந்த 2019ம் ஆண்டில் தெலுங்கு படவுலகில் மீடூ விவகாரம் எழுந்தபோது, அதுபற்றி விசாரிக்க உயர்மட்டக்குழு ஒன்றை பாரத ராஷ்டிர சமிதி தலைமையிலான அப்போதைய மாநில அரசு அமைத்தது. இந்த உயர்மட்டக்குழு, தெலுங்கு திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை ஆராய துணைக்குழு ஒன்றை கொண்டு வந்தது. இக்குழு கடந்த 2022லேயே அம்மாநில அரசிடம் அந்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையைத்தான் அரசு தற்போது வெளியிட வேண்டும் என்று சமந்தா வலியுறுத்தியுள்ளார்.