Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாலியல் புகார் கூறி பெண்கள் மறியல் தெலுங்குதேசம் எம்எல்ஏ உண்ணாவிரதம்

திருமலை : ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம், திருவூர் தொகுதி தெலுங்கு தேச எம்எல்ஏ கோலிகபுடி சீனிவாச ராவ். இவர், பெண்களின் வாட்ஸ்அப் எண்களுக்கு ஆபாச செய்திகளை அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவரை கட்சியில் இருந்து நீக்கும்படி திருவூரு மண்டலத்தில் உள்ள சித்தேலோவில் நேற்று பெண்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், `எங்களிடம் ஆபாசமாக பேசுவதுடன் தகாத கருத்துகளை எம்எல்ஏ கூறுகிறார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்’ என்றனர்.

இதையறிந்த எம்எல்ஏ கோலிகபுடி சீனிவாச ராவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் கைது செய்து தண்டனை கொடுக்க வேண்டும். இல்லையெனில் பொய் புகார் கூறுவோரை தண்டிக்க வேண்டும். இப்பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி உடனடியாக உண்ணாவிரதம் தொடங்குகிறேன்’ என கூறி தனது அலுவலகம் அருகே தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் தொடங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த சில நிமிடங்களில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நேரடியாக எம்எல்ஏவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எம்எல்ஏ சில விளக்கங்களை கொடுத்ததாக ெதரிகிறது. இதனை கேட்டறிந்த முதல்வர், இதுகுறித்து விசாரிக்கப்படும். எனவே உடனடியாக உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்’ என அறிவுறுத்தினார். அதன்பேரில் எம்எல்ஏ உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

ஏற்கனவே திருப்பதி மாவட்டம் சத்தியவேடு தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ ஆதிமூலம் அதே கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகியை பலாத்காரம் செய்ததாக வந்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு எம்எல்ஏ மீது பாலியல் புகார் எழுந்துள்ளதால் ஆளுங்கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.