அமெரிக்கா தீ விபத்தில் தெலங்கானா மாணவி பலி
நியூயார்க்: அமெரிக்காவில் தீ விபத்தில் தெலங்கானா மாணவி பலியானார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அல்பானி பகுதியில் தங்கியிருந்து இந்திய மாணவி சஹஜா ரெட்டி உடுமலா முதுகலை பட்டப் படிப்பு வந்தார். இவர் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர். இந்நிலையில் சஹஜா தங்கியிருந்த வீட்டில் கடந்த 4ம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து 4 பேரை மீட்டனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் தீக்காய சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். துரதிஷ்டவசமாக விபத்தில் காயமடைந்த சஹஜா உயிரிழந்தார். இது தொடர்பாக நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,‘‘அல்பானியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த உடுமலா மறைவால் மிகவும் வருத்தம் அடைந்துள்ளோம். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.