சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சமூகத்திலுள்ள அனைத்து வருவாய் பிரிவினர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்தி தருவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், 36 தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்) காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நகர் ஊரமைப்பு இயக்ககம், நகர்ப்புற திட்டமிடல், நிலப்பயன்பாட்டை ஒழுங்குப்படுத்துதல், உட்கட்டமைப்பு மேம்பாடு, குடியிருப்பு மற்றும் வணிக அபிவிருத்திகளுக்கு திட்ட அனுமதி வழங்கும் பணிகள் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் 24 அளவர் / உதவி வரைவாளர் காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பணிநியமன ஆணைகளை தலைமை செயலகத்தில் வழங்கினார்.
