Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கண்ணீர் கடலில்...

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த ஆக.5ம் தேதி கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்களின் படகு காற்றின் வேகத்தில் திசை மாறி இலங்கை கடற்பரப்பிற்குள் சென்றது. படகு பாறையில் சிக்கியதால் பரிதவித்த மீனவர்கள் 11 பேரையும் மீட்டு, இலங்கை அரசு சிறையில் தள்ளியுள்ளது.

இதேபோல கடந்த 12ம் தேதி மீன் பிடிக்க சென்ற 9 ராமேஸ்வரம் மீனவர்களும் கைதாகியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதோடு, 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2 மாத மீன்பிடி தடைக்காலத்துக்கு பிறகு கடந்த ஜூன் 15ம் தேதி முதல் தான் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

இடையில் பலத்த காற்று உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான நாட்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இந்த சூழலில் கடலுக்கு செல்பவர்களையும் சிறை பிடிப்பது மீன்பிடியை நம்பியுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மூழ்கடிக்கும் செயலாகும். வழக்கம்போல ஒன்றிய பாஜ அரசு, மீனவர்கள் சிறை பிடிக்கப்படும் விவகாரத்தில் அலட்சியப்போக்காகவே செயல்படுகிறது.

கடந்த 2015 முதல் 2025ம் ஆண்டு வரை மட்டும் 2,870 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 454 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் கொடுமை என்னவென்றால், பறிமுதல் செய்யப்படும் விசைப்படகுகள் அந்நாட்டு புதிய சட்டப்படி அரசுடைமையாக்கப்படும். இதனால் பல லட்சங்களை செலவு செய்து விசைப்படகு வாங்கி, இலங்கைக்கு இலவசமாக தாரை வார்த்தது போல நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

முந்தைய திமுக அரசு மீனவர்கள் சிறை பிடிக்கப்படும்போதெல்லாம் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரும். விடுவிக்கப்படும் வரை தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும். தற்போதைய தவெக அரசு கடிதம் எழுதுவதோடு ஒதுங்கிக் கொள்கிறது.  மீனவர்கள் விவகாரத்தில் ஒன்றிய அரசு பாராமுகமாக இருப்பது கவலையளிக்கும் விஷயமாகும். மீன்பிடி தொழல் மூலம் ஆண்டுதோறும் அந்நிய செலவாணியாக ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் இந்திய அரசுக்கு வருவாய் வருகிறது.

இதில் தமிழக மீனவர்களின் பங்கு மட்டும் 80 - 85 சதவீதம் வரை உள்ளது. வருவாய் ஈட்டுத்தரும் மீன்பிடி தொழிலில் இருக்கிற துயரங்களை கண்டுகொள்ளாமல், மீனவர்களை கண்ணீர் கடலில் ஒன்றிய அரசு தத்தளிக்க வைக்கிறது.  கைதாகி சிறையில் அடைக்கப்படும் மீனவர்களை குறுகிய அறையில் அடைப்பது, சுகாதாரமற்ற அறையை தருவது, ஒழுங்காக உணவு அளிக்காதது, விடுதலை உத்தரவு வந்தாலும் உடனடியாக விடுவிக்காமல் வைத்திருப்பது என இலங்கையில் பல இன்னல்களை சந்திப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அண்டை நாடாக இருந்தாலும், மீனவர்கள் விவகாரத்தில் சண்டை நாடாகவே இலங்கை இருந்து வருகிறது. அந்நாட்டுக்கு ஒரு பிரச்னை என்றாலும், ஓடோடி சென்று உதவிக்கரம் நீட்டும் இந்திய அரசு, ஏன் மீனவர்கள் விவகாரம் ெதாடர்பாக உரிய பேச்சு வார்த்தை நடத்தவில்லை? மீனவர்கள் சிறை பிடிக்கும் சம்பவங்களை தட்டி கேட்கவில்லையென்ற ஆதங்கம் தமிழக மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுதொடர்பாக இருநாடுகள் தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தி, சிறை பிடித்த அனைத்து மீனவர்கள், பறிமுதல் செய்த படகுகளையும் மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற மீனவ குடும்பங்களின் கோரிக்கை இனியாவது நிறைவேறுமா?