குப்புற படுத்துக் கொண்டு மாணவரை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை: ராஜஸ்தான் வகுப்பறையில் அதிர்ச்சி
அந்த வீடியோவில், தரையில் குப்புற படுத்திருக்கும் ஆசிரியையின் மீது மாணவர்கள் சிலர் ஏறி நின்று அவரது கால், உடம்புகளின் மீது நின்று மசாஜ் செய்கின்றனர். அந்த மாணவர் ஆசிரியை மீது நிலைதடுமாறி விழாதபடி, மற்றொரு மாணவர் மசாஜ் செய்யும் மாணவரின் கையை பிடித்துக் கொள்கிறார். இவ்வாறு ஆசிரியைக்கு மாணவர் மசாஜ் செய்து கொண்டிருக்கும் போது, மற்றொரு ஆசிரியை நாற்காலியில் அமர்ந்து கொண்டு சிரிப்பதைக் காண முடிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, பொறுப்பற்ற ஆசிரியைகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தை விமர்சித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் அஞ்சு சவுத்ரி கூறுகையில், ‘வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதனால் மாணவர்களை கொண்டு தன் கால்களை மசாஜ் செய்யச் சொல்லியிருக்க வாய்ப்புள்ளது. எவ்வாறாயினும், இதுகுறித்த உண்மையைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.
மேற்கண்ட சம்பவம் குறித்து மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர் கூறுகையில், ‘பள்ளிகளில் இதுபோன்ற நடத்தைகளை அனுமதிக்க முடியாது. சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.