செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே அரசுப்பள்ளி ஆசிரியை வீட்டில் 24 சவரன், ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் ராதாநகர் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (48). இவர் சொந்தமாக ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவரது மனைவி லாவண்யா (40) கிளாம்பாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை லாவண்யா வேலைக்குச் சென்றபின் பத்மநாபனும் வீட்டை பூட்டிவிட்டு தாம்பரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு போட்டோ எடுப்பதற்காக சென்றுவிட்டார். வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பத்மநாபன், லாவண்யா இருவரும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 24 சவரன் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளி பொருட்களை திருடு போயிருந்தன. அதிர்ச்சியடைந்த பத்மநாபன் இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்கம்பக்கத்தில் விசாரணை நடத்தி அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து அதனை வைத்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.



