Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

``டேஸ்ட்தான் எங்க அடையாளம்...”

30வருட பிரியாணிக்கடை

சென்னையில் உள்ள சில ஏரியாக்கள் சில குறிப்பிட்ட விசயங்களுக்கு ஃபேமசா இருக்கும். பழைய பொருட்களுக்கு மூர்மார்க்கெட், ட்ரெஸ் எடுக்க தி.நகர் ரங்கநாதன் தெரு, காய்கறிக்கு கோயம்பேடு... இவ்வாறு நீள்கிற வரிசையில் ஜெராக்ஸ் மெஷின் சர்வீஸ், ஸ்பேர் பார்ட்ஸ்க்கு பேர் போன இடம்னா அது ஆயிரம் விளக்கு அஜிஸ்முல்க் முதல் தெருதான். குறுகலான இந்தத் தெரு ஜெராக்ஸ் மெஷின் மார்க்கெட் போலவே காட்சியளிக்கும். இந்தத் தெருவுக்கு இன்னொரு அடையாளமும் இருக்கிறது. அது 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுவையில் அசத்தி வரும் உமர் பிரியாணிதான். அண்ணா சாலையில் இருந்து க்ரீம்ஸ் சாலைக்கு திரும்பும் இடத்தில் இடது புறம் செல்லும் தெருதான் அஜிஸ் முல்க் முதல் தெரு. இந்தத் தெருவின் முதல் கடையாகவே அமைந்திருக்கிறது உமர் பிரியாணிக்கடை. பெரிய அளவுக்கு இடம் இருக்காது. மிகவும் சிறிய கடை. ஆனால் சாப்பிட வேண்டும் என்றாலும், பார்சல் வாங்க வேண்டும் என்றாலும் சிறிது நேரம் காத்திருந்துதான் வாங்க முடியும். அந்தளவுக்கு கூட்டம் முண்டியடிக்கும். காத்திருந்து வாங்கினாலும் அதற்கேற்ப ஒரு வேற லேவல் பிரியாணி சாப்பிட்ட அனுபவம் கிடைக்கும். அதிக விலையும் இல்லை. மற்ற கடைகளுடன் ஒப்பிடுகையில் ரொம்ப கம்மி.

ஆனால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த ரெகுலர் ருசியை அப்படியே மாறாமல் கொடுத்து வருகிறார்கள். இந்தக் கடையின் உரிமையாளர் ரிஸ்வானைச்சந்தித்தோம். கடையில் பார்சல் வாங்குபவர்களுக்கு பில் போட்டபடியே நம்மிடமும் கொஞ்சம் பேசினார். ``அப்பா ஹனீப் காலத்தில் இருந்தே இந்தக் கடையை நடத்தி வருகிறோம். அப்போதிருந்தே சிக்கன் பிரியாணிதான் எங்கள் அடையாளம். 10 ரூபாயில் இருந்து பிரியாணி கொடுக்க ஆரம்பித்தோம். பின்னர் படிப்படியாக 20 ரூபாய், 30 ரூபாய் என சிக்கன் விலைக்கு ஏற்றபடி பிரியாணி விலையைக் கூட்டினோம். ஆனாலும் இப்போதும் சாதாரண மக்கள் சாப்பிடும் அளவுக்குத்தான் விலையை வைத்திருக்கிறோம். இந்த ஏரியா பலதரப்பட்ட மக்கள் வாழும் பகுதியாக இருக்கிறது. முதலாளிகள், தொழிலாளர்கள் என பலரும் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வந்து சாப்பிடும் கடையாக இந்தக் கடையைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். முன்பெல்லாம் பிரியாணி என்றால் மிகவும் அபூர்வம்.

ஏதாவது விசேஷங் களில் சாப்பிட்டால்தான் உண்டு. கடைகள் என்று பார்த்தால் எங்காவது ஒரு சில கடைகளில்தான் பிரியாணி கிடைக்கும். அதையும் தேடி அலைய வேண்டும். இப்போது பிரியாணி மீல்ஸ் போல் ஆகிவிட்டது. மூலைக்கு மூலை பிரியாணிக் கடைகள் வந்துவிட்டன. ஆனால் நல்ல கடைகள்தான் எப்போதும் நிலைத்து நிற்க முடியும். இப்போது பிரியாணிகளில் பல விசயங்கள் ட்ரெண்டாகி வருகின்றன. நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்காக ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என நினைப்பதில்லை. நாங்கள் வழக்கமாக கொடுக்கும் டேஸ்ட்டை மாற்றிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதனால்தான் 30 வருட கஸ்டமர்கள் கூட இன்றும் தொடர்ந்து வருகிறார்கள். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் நம்ம கடையைத் தேடி வந்து சாப்பிடுகிறார்கள். அதுபோல் வெளியூர் செல்பவர்கள் நமது கடையின் பிரியாணியை பார்சல் வாங்கிச் சென்று சாப்பிடுகிறார்கள். டி.இமான் போன்ற சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை நம்ம கடையின் கஸ்டமர்களாக இருக்கிறார்கள்.

காரில் வந்தும் வாங்குவார்கள், தட்டு வண்டியில் வந்தும் வாங்குவார்கள். எல்லோருக்கும் நமது சுவை ஒன்றாகத்தான் இருக்கும். திருவல்லிக்கேணியில் இருந்து ரெகுலராக ஒரு கடையில் சிக்கன் வாங்குவோம். அதை நன்றாக சுத்தம் செய்து பிரியாணிக்கு தயார் செய்வோம். மசாலாக்களை கடைகளில் வாங்குவது கிடையாது. நாங்களே எங்களது கைப்பக்குவத்தில் தயாரிக்கிறோம். தந்தூரிக்கு சார்க்கோல் அடுப்பைப் பயன்படுத்துகிறோம். நம்ம பிரியாணிக்கு சார்க்கோல் அடுப்பில் பதமாக வெந்த தந்தூரி நல்ல காம்பினேசன். காலை 11.30 மணிக்கு தொடங்கும் இந்தக் கடையில் இரவு 10.30 வரை எப்போதும் பிரியாணி கிடைக்கும். ஆர்டர் செய்பவர்களுக்கு மட்டன் பிரியாணி செய்து தருகிறோம். திருமண ஆர்டர்களுக்கும் செய்து தருகிறோம். மாஸ்டர்ஸ், லேபர்ஸ் என அனைவரும் என்னுடைய தம்பிகள் போல செயல்படுகிறார்கள். இந்தக் கடையின் தொடர்ச்சியான வியாபாரத்திற்கு அதுதான் காரணம். கடையை விரிவு படுத்தலாம் என நினைக்கிறோம். அதையும் இந்தப் பகுதியில்தான் செய்வோம். எவ்வளவுதான் வளர்ந்தாலும் ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்க் தெருதான் எங்கள் அடையாளம்’’ என

பெருமிதத்துடன் கூறுகிறார்.

- அ.உ.வீரமணி

படங்கள்: வீரா.