Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டாஸ்மாக் கடையை அகற்றாமல் போலீஸ் பாதுகாப்பு அளிப்பதா?.. முதல்வர் விஜய்க்கு பெண்கள் கண்டனம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே நூரோலை பெரியாயி அம்மன் கோயில்-கீழ்பாடி சாலையில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. பெண்கள், மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடவே கடந்த 2024ல் அதிகாரிகள் அந்த கடைக்கு சீல் வைத்தனர். ஆனால் தற்போது மீண்டும் அதே இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு இயங்கத் தொடங்கியது. மீண்டும் திறக்கப்பட்ட கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஒரு மாதத்திற்கு முன்பே அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் வாலிபர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை டாஸ்மாக் கடை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார், போராட்டத்துக்கு அனுமதி கிடையாது, மீறினால் கைது செய்வோம் என எச்சரித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் தொலைவிலுள்ள ஆலமரத்து அடியில் நின்று பொதுமக்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதுபற்றி அப்பகுதி பெண்கள் கூறும்போது, தேர்தலுக்கு முன்பு, நாங்கள் ஆட்சிக்குவந்தால் பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் என ஜோசப் விஜய் கூறினார். ஆனால் இப்போது டாஸ்மாக் கடையை அகற்றாமல், அதற்குப் பதிலாக 50க்கும் மேற்பட்ட போலீசாரைக் கொண்டு கடைக்கு பாதுகாப்பு கொடுக்கிறார். அவரது பேச்சும், செயல்பாடும் மாறுபட்டதாக இருக்கிறது என்றனர்.