Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

இன்று முதல் அமலாகிறது டாஸ்மாக் மது ஆன்லைனில் விற்பனை: சிறுவர்கள் உள்பட புதிய குடிகாரர்களை உருவாக்கும் திட்டம் என அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டு

சென்னை: ஆன்லைனில் மதுபானம் முன்பதிவு செய்து கடையில் பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய இணையதளத்தை இன்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) அறிமுகப்படுத்துகிறது. தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் புதிய இணையதளமான Tasmac2e.in-ஐ இன்று முதல் அறிமுகமாகிறது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மதுபானங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து, தாங்கள் விரும்பும் டாஸ்மாக் கடையில் நேரடியாக சென்று பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய சேவை மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளின் இருப்பு விவரங்களை வாடிக்கையாளர்கள் நேரடியாக பார்க்க முடியும். இதனால் தேவையான பிராண்ட் கிடைக்கிறதா என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் உள்நுழையும் போது 21 வயது நிறைவடைந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதன்பிறகு, 5 முதல் 25 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை அல்லது கடை எண், மாவட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் தேட முடியும். தேர்வு செய்த மதுபானத்திற்கான தொகையை ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் செலுத்தி, பின்னர் குறிப்பிட்ட டாஸ்மாக் கடைக்குச் சென்று பொருளைப் பெற்றுக்கொள்ளலாம்.

சென்னையில் இருக்கும் ஒருவர் கூட, திருநெல்வேலி போன்ற வேறு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கிடைக்கும் மதுபானத்தை இணையதளத்தில் முன்பதிவு செய்து பணம் செலுத்த முடியும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த புதிய நடைமுறை மூலம் குறைந்த பட்ச சில்லறை விலையை மீறி கூடுதல் தொகை வசூலிப்பதை கட்டுப்படுத்த முடியும் எனவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த திட்டத்திற்கு சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம் மூலம், சிறுவர்கள், பெண்கள் முன்பதிவு செய்து கூட்டம் இல்லாத நேரத்தில் வந்து வாங்கிச் செல்ல முடியும். பொதுமக்கள் முன்பு வாங்கினால், தப்பாக நினைப்பார்கள் என்று நினைத்து மதுக்கடைகளுக்கு அவர்கள் வருவது இல்லை. ஆனால் முன்பதிவு செய்தால், கூட்டம் குறையும். இந்த நேரத்தில் அவர்கள் வாங்கிச் செல்ல வசதியாகிவிடும். இதன்மூலம் புதிய குடிகாரர்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அரசின் நிர்வாகத்தோல்வியை மறைக்கவே இதுபோன்ற தவறான திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி என்று அவர்கள் தெரிவித்தாலும், அந்த தொழில் நுட்ப வளர்ச்சியை ரேஷன் கடைகளுக்கு பயன்படுத்த வேண்டியதுதானே, ஏன் டாஸ்மாக் கடைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.