Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

டாஸ்மாக் காலி பாட்டில்களுக்கு வங்கி கணக்கில் நேரடியாக வரவு: தானியங்கி இயந்திரங்கள் நிறுவ அரசு உத்தரவு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரூ.10 தொகையை, வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்கில் இதுவரை காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறும்போது வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 ரொக்கமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையால் கடை ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதுடன், காலி பாட்டில்களைச் சேமித்து வைப்பதற்கு இடப்பற்றாக்குறை உள்ளிட்ட சிக்கல்களும் நிலவி வந்தன. இதனைத் தவிர்க்கும் வகையில் புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, மது பாட்டில்களில் தனித்துவமான க்யூஆர் குறியீடு இடம்பெறும். வாடிக்கையாளர்கள் காலி பாட்டில்களை தானியங்கி இயந்திரத்தில் செலுத்தும்போது, அதில் உள்ள குறியீடு ஸ்கேன் செய்யப்பட்டு அரசின் விற்பனை பதிவுகளுடன் சரிபார்க்கப்படும். சரிபார்ப்பு முடிந்ததும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் வழங்கப்படும் ரூ.10 தொகை, வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

க்யூஆர் குறியீடு இல்லாத பாட்டில்கள், சேதமடைந்த அல்லது படிக்க முடியாத குறியீடுகளைக் கொண்ட பாட்டில்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும், அரசின் விற்பனை பதிவுகளில் இடம்பெறாத பாட்டில்களும் நிராகரிக்கப்படும். இதற்கான காரணம் இயந்திரத்தின் திரையில் தெரிவிக்கப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் முடிவடைந்ததும், தனியார் நிறுவனம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் படிப்படியாக இயந்திரங்கள் நிறுவப்படும். அதுவரை தற்போது நடைமுறையில் உள்ளபடி காலி பாட்டில்களை திரும்ப பெற்று ரூ.10 வழங்கும் முறை தொடரும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.