விவசாயத்தில் நீர் மேலாண்மை மிக அவசியம். நீர் மேலாண்மைக்கு இப்போது பல முறைகள் வந்துவிட்டன. இருந்தபோதும் சொட்டுநீர் பாசன முறைதான் இன்று பல விவசாயிகளுக்கு நீர் மேலாண்மையை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் தோழகிரிப்பட்டியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற விவசாயி கடந்த 7 ஆண்டுகளாக தனது வயலில் சொட்டுநீர்க் குழாய்கள் அமைத்து நெல் சாகுபடியில் அபரிமிதமான வருமானத்தைப் பெற்று சாதனை படைத்து வருகிறார். அவரை சந்தித்தபோது, சொட்டுநீர்ப் பாசனத்தில் ஏற்படும் சிரமங்கள், சாதனை, வருமானம் போன்றவற்றை விளக்கமாக தெரிவித்தார். ``எனக்கு சொந்தமான வயலில் நெல், ஆலைக்கரும்பு போன்றவற்றை சாகுபடி செய்து வருகிறேன். இந்த பகுதியில் தண்ணீர் லெவல் குறைந்துகொண்டே போகிறது. ஆரம்பத்தில் 100 அடியில் இருந்த தண்ணீர் லெவல் இப்போது 300 அடிக்கு மேல் போய்விட்டது.
அப்படியே போர்வெல் அமைச்சாலும் தண்ணீர் சரியாக கிடைப்பதில்லை. அப்போதான் வேளாண் துறை அதிகாரிகள் நெல் சாகுபடியில் சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சா தண்ணீர் தேவை குறையும்னு சொன்னாங்க. நீர் மறைய நீர் கட்டுதல் என்ற முறையில் நம் முன்னோர்கள் சாகுபடி செய்து இருக்காங்க. சிறு, குறு விவசாயிகளுக்கு இந்த முழுமையான மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனத்தை அமைத்து தராங்க. பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் கிடைக்கும்.தண்ணீர் பற்றாக்குறை இருந்ததால் நெல் சாகுபடியில் செலவுகள்தான் அதிகம் ஆனது. அதனால எனது ஒரு ஏக்கர் நிலத்தில் சொட்டுநீர்க் குழாய்களை அரசு அளித்த முழுமையான மானியத்தில் அமைத்தேன். இதுல புழுதி ஓட்டுதல் மட்டும்தான் செய்யணும். வயலை புழுதி ஓட்டி முடிச்ச உடனே குழாய்களை 3க்கு 3 என்ற இடைவெளியில் அமைத்து இடைப்பட்ட பகுதியில் ரொட்டோவேட்டர் மூலம் நெல் விதைகளை நடவு செய்தேன்.
விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவி வரும் நேரத்தில் இதுபோன்ற அமைப்பு மிகவும் உதவிகரமாக இருக்கு. இந்த சொட்டுநீர்ப் பாசனத்திற்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 8 கிலோ விதை நெல் இருந்தால் போதும். நாற்று விட்டு சாகுபடி செய்ய 30 கிலோ தேவைப்படும். ஆனால் இதில் விதை நெல்லும் குறைவுதான்.சாதாரணமாக ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆனா, சொட்டுநீர்ப் பாசனம் மூலமா 14 லட்சம் லிட்டர் மட்டுமே போதும். முன்னாடி 12 மணி நேரம் தண்ணீர் பாய்ச்சிட்டிருந்தேன். இப்போ ஒரு மணி நேரம் மட்டும்தான் தண்ணீர் பாய்ச்சிக்கிட்டிருக்கேன். அதனால தண்ணீர் செலவும் இப்போ குறைஞ்சிருக்கு. ஆரம்பத்துல சொட்டுநீர்ப் பாசனம் செய்கிறோமே விளைச்சல் எப்படி இருக்குமோ என்று பயந்தேன். ஆனால் அட்டகாசமாக பயிர்கள் வளர்ந்தது. இனி வர்ற காலத்துக்கு தண்ணீர் பற்றாக்குறைக்கு வாய்ப்பிருக்கு. அதனால சொட்டுநீர்ப் பாசன முறை, விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்னுதான் சொல்லணும். வெளிநாட்ல எல்லாம் சொட்டுநீர் பாசனத்துக்கு மாறிக்கிட்டிருக்காங்க. நாமும் மாற வேண்டிய கட்டாயத்துல இருக்குறோம்.
விவசாய வேலைகளுக்கும் போதுமான ஆட்கள் இல்லை. சொட்டுநீர் பாசனம் அமைக்குறப்போ உற்பத்தி அதிகமாகுறதோட களையெடுக்க, தண்ணீர் பாய்ச்ச ஆட்கள் செலவும் குறையுது. சொட்டுநீர் பாசனத்தின் மூலம் ஒரு தூருக்கு 20 முதல் 24 நெற்கதிர்கள் வளர்ந்து வரும். ஆனா வழக்கமான விவசாயத்துல ஒரு தூருக்கு 10 முதல் 14 நெல் கதிர்கள் வரைக்கும் வளரும். சொட்டு நீர் பாசனத்துல விளைச்சல் 38 முதல் 40 மூட்டைகள் கிடைத்தது. சாதாரண நீர்ப்பாசனத்துல ஏக்கருக்கு 28 முதல் 32 வரை மூட்டைகள் கிடைக்கும். சாதாரணமா செய்யுற விவசாயத்தை சொட்டு நீர் பாசனத்துல நெற்கதிர்களை வளர்க்குறப்போ களைகளும் குறைவா இருக்குறதால, அந்த செலவு குறைவா இருக்கு.
உழவு ஓட்டி விதை நட்ட பின்னாடி 4 மணிநேரம் தண்ணீர் பாய்ச்சினால் இரண்டு நாட்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தேவையில்லை. விதை நட்ட 10 நாட்களில் ஒருமுறை களை இருந்தால் மட்டுமே எடுக்க வேண்டும். சொட்டுநீர் பாசனத்தில் சாகுபடி பயிர்களில் அதிக களைகள் வராது. ஏனென்றால் நெல் பயிருக்கு நேரடியாக வேர்பகுதியில் தண்ணீர் இறங்கும், இதனால் தண்ணீர் தேவையும் குறையும், களை மண்டுவதும் குறையும். வேர்ப்பகுதியில் தண்ணீர் இறங்குவதால் அதிக தூர்கள் அடிக்கும்.
இதனால் மகசூலும் அதிகம் கிடைக்கிறது. ஒரு நாளுக்கு 4 முதல் 6 மணி நேரம் வரை தண்ணீர் பாய்ச்சினால் 3 நாட்களுக்கு தண்ணீர் தேவை இருக்காது. மிகவும் எளிமையாக பம்ப்செட்டை இயக்கி வால்வை திறந்தால் போதும். மடை அடைக்க வேண்டும், தண்ணீர் நிரம்பியவுடன் காத்திருந்து நிறுத்த வேண்டும் என்ற வேலையே இருக்காது. நாம் வேறு வேலைகளை பார்த்துவிட்டு தண்ணீரை நிறுத்தலாம். அதேபோல் ஒரு டிரம் வைத்து தேவையான உரக் கரைசலை தண்ணீருடன் கலந்து சொட்டுநீர்ப் பாசனக் குழாய் வால்வை போட்டு தண்ணீரை திறந்து விட்டால் போதும். தண்ணீருடன் உரக் கரைசல் கலந்து நேரடியாக பயிருக்கு செல்லும். இதனால் இடுபொருட்கள் செலவும் குறைவுதான்’’ என்கிறார்.(சொட்டுநீர் பாசனத்தின் பயன்கள் குறித்த தகவல்கள் அடுத்த இதழிலும் இடம்பெறும்)
தொடர்புக்கு:
கோவிந்தராஜ்: 97881 88858.
காய்த்துளைப்பானைக் கட்டுப்படுத்தும் முறைகள்!
தக்காளியைத் தாக்கும் பூச்சிகளில் காய்த்துளைப்பான்கள் மிகுந்த சேதத்தை உண்டாக்கும் வல்லமை கொண்டவை. இவற்றை கட்டுப்படுத்த சில முறைகளைக் கையாளலாம். தக்காளி சாகுபடி செய்யப்பட்ட வயலில் இனக்கவர்ச்சிப் பொறியினை ஒரு ஹெக்டேருக்கு 12 என்ற அளவில் வைப்பதன் மூலம் பெண் பூச்சியினைக் கவர்ந்து, இவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.தக்காளி நாற்றுக்களை நடவு செய்யும்போதே 40 நாள் வயதுடைய கேந்திச் செடிகளை 16 வரிசை தக்காளி செடிகளுக்கு ஒரு வரிசை என்ற அளவிற்கு நடவு செய்ய வேண்டும்.வளர்ந்த புழுக்களையும் தாக்கப்பட்ட பழங்களையும் பொறுக்கி அழிக்க வேண்டும்.
எண்டோசல்பான் லிட்டருக்கு 2 மி.லி. அல்லது கார்பரில் லிட்டருக்கு 2 கிராம் அல்லது குயினில் ஃபாஸ் லிட்டருக்கு 2.5 மிலி அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.தமிழ்நாட்டில் தக்காளி இலைப்பேன் தாக்குதல் மூலம் பரவும் குத்துக்கருகல் நச்சுயிரி நோயும் அதிக சேதத்தை ஏற்படுத்தும். இந்த நோய் தாக்கினால் இலைகளின் அடிப்பகுதியில் நரம்புகள் ஊதா நிறமடைந்து, பின்பு புள்ளிகள் தோன்றி காயத் தொடங்கிவிடும். முற்றிய நிலையில் முழுச் செடியும் வாடிவிடுகிறது. இலைப்பேன்கள்தான் இந்த நச்சுயிரியைப் பரப்பும். எனவே இலைப்பேன்களை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த நோய் பரவாமல் ஓரளவு தடுக்கலாம்.



