Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ் வழி ஒதுக்கீட்டிற்கு போலி சான்றளித்தவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தமிழ் வழி ஒதுக்கீட்டிற்கு போலி சான்று அளித்து முறைகேட்டில் ஈடுபட்ேடார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கையளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சக்திராவ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019ல் நடத்திய குரூப் 1 தேர்வில், தொலை நிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு, தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகை வழங்கப்பட்டது. இதை எதிர்த்த வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட் கிளை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. அந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு காரணமானவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். அரசு தரப்பில், ‘‘தமிழ் வழி இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்த முயன்றவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழ்நாடு உயர்கல்வி துறை செயலரை எதிர்மனுதாரராக சேர்த்தனர். மேலும், தமிழ் வழியில் பயின்றதாக போலியான சான்றிதழை அளித்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்.9க்கு தள்ளி வைத்தனர்.