Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தமிழர்கள் இல்லையா சார்..?

சென்னை மாநகர பேருந்துகளில் 1,797 நடத்துநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த தனியார் ஏஜென்சியுடன் தவெக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு போக்குவரத்து தொழிற்சங்கங்களும், ஊழியர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விபரீத முடிவால், குறிப்பிட்ட அந்த உ.பி நிறுவனம் வடஇந்தியர்களை பணிக்கு எடுக்கும் அபாயம் உருவாகியுள்ளது. சென்னையில் உள்ள முக்கிய 4 மண்டல பணிமனைகளுக்கு தேவையான மனிதவளம் மற்றும் அடிப்படை ஊதிய கட்டமைப்பு வரையறுக்கப்பட்டுள்ளது. அடையாறு மண்டலத்தில், தினசரி 350 பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

ஒரு நபருக்கான அடிப்படை வீதம் ரூ.27,679 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (கூடுதலாக 18% ஜி.எஸ்.டி). குரோம்பேட்டை மண்டலத்தில் தினசரி 320 பணியாளர்கள் தேவை. அடிப்படை வீதம் ரூ.27,679 மற்றும் 18% ஜி.எஸ்.டி. வடபழனி மண்டலத்தில் தினசரி 295 பணியாளர்கள் தேவை. அடிப்படை வீதம் ரூ.27,679 மற்றும் 18% ஜி.எஸ்.டி. அயனாவரம் மண்டலத்தில் தினசரி 256 பணியாளர்கள் தேவை. அடிப்படை வீதம் ரூ.27,679 மற்றும் 18% ஜி.எஸ்.டி. இதன்மூலம் ஒரு பணியாளருக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை தொகைக்கு மேல் 18 சதவீத ஜி.எஸ்.டி இணைக்கப்பட்டு, அந்நிறுவனத்திற்கு தொகை வழங்கப்படும்.

தவெக அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. பல ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகங்களில் பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், லட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு பணிக்காக காத்திருக்கின்றனர்.

இத்தகைய சூழலில், அரசு நிரந்தர பணியிடங்களை உருவாக்காமல், தனியார் மயமாக்கல் மற்றும் ஒப்பந்த முறைக்கு வழிவகுப்பது பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டிருப்பதன் மூலம், உள்ளூர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு, வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணியமர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே, சாலையோர டீக்கடை முதல் ஸ்டார் ஓட்டல் வரை வடமாநில தொழிலாளர்கள் ஆக்கிரமிப்பு நிரம்பி இருக்கிறது. இது, போதாது என்று, அரசே போக்குவரத்து துறையில் வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்துவது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. மாநகர பேருந்துகளில் தினசரி லட்சக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் பயணிக்கின்றனர்.

உள்ளூர் நிலவியல், பேருந்து நிறுத்தங்களின் பெயர்கள் மற்றும் தமிழ் மொழி பயன்பாடு மிக அவசியமான ஒன்றாக இருக்கும் நடத்துநர் பணிக்கு, வெளிமாநில நிறுவனங்களின் வழியே ஊழியர்கள் நியமிக்கப்பட்டால் பயணிகளுடன் தகவல் தொடர்பில் சிக்கல்கள் எழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த ஒப்பந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும், வெளிமுகமை முறையை கைவிட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வெளிப்படையாக நிரந்தர நடத்துநர்களை தேர்வுசெய்ய வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களின் ஒற்றை கோரிக்கை. இந்த விவகாரம், அடுத்தக்கட்டமாக பெரும் அரசியல் விவாதமாக உருவெடுக்கும் முன்பு, தவெக அரசு விழித்துக்கொள்வது நல்லது.