Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழர்களின் உணவுப் பழக்கமும்... புழங்கும் பொருட்களும்...

தமிழர்களின் உணவுப் பழக்கத்தோடு தொடர்புடைய புழங்கு பொருட்கள் ஏராளம் இருக்கின்றன. சமையல் செய்வதற்குத் தேவையான பாத்திரங்கள் முதல் கரண்டிகள் வரை அனைத்துமே புழங்குப் பொருட்கள்தான். அவைகள் பெரும்பாலும் மண், கல், மரம் மற்றும் இயற்கைப் பொருட்களை மட்டுமே வைத்து உருவாக்கப்பட்ட பொருட்கள் ஆகும். கால மாற்றத்திற்குப் பிறகு வேறுவேறு உலோகங்களைக் கொண்டு இந்தப் பொருட்கள் தயாரிக்கப்பட்டாலும் பழங்காலப் பொருட்களின் தேவை, பயன் மற்றும் அதன் உருவாக்கம் எப்படி இருந்தது என்பது பற்றி தெரிந்துகொள்வது தேவையான ஒன்றே.

மண்பாண்டங்கள்

உலோகங்களின் கண்டுபிடிப்பினால் அதிலும் குறிப்பாக விலை மலிவான அலுமினியப் பாத்திரங்கள் வருகைக்குப் பிறகு கிராமத்து அடுப்பங்கரைகளில் மண்பாண்டங்களின் எண்ணிக்கைக் குறைந்து போனது. நாட்டுப்புற மக்களின் உணவுப்பழக்கத்தில் மண்பாண்டங்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன. அவற்றுள் குறிப்பிடத் தக்கவை சட்டி, பானை ஆகும்.

பானைகள்

பலவகையான பானைகளை மக்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். அடுக்குப்பானை, சோற்றுப்பானை, கூழ்பானை, மாவுபானை, பால்பானை, மோர்பானை, கழனிபானை, தொட்டிபானை என்று பானைகளின் பட்டியல் நீள்கிறது.

அடுக்குப்பானை

தானியங்கள், உப்பு, புளி, மிளகாய் மற்றும் மளிகைப் பொருட்கள் ஆகியவற்றைப் பானைகளில் சேமித்து அவற்றை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி வைப்பது அடுக்குப்பானை ஆகும். அடுக்கில் பெரியபானையை பிரிமனை யின் மீது வைத்து அதன்மீது பல்வேறு அளவுடைய சிறுசிறு பானைகள் அடுக்கப்பட்டிருக்கும். பொருட்களின் அளவுக்கேற்ற வடிவங்களில் பானைகள் அமைந்திருக்கும். பானையிலுள்ள தானியங்களில் பணம், காசு ஆகியவற்றை நுழைத்துப் பாதுகாத்து வைப்பது பெண்களிடம் உள்ள வழக்கம். பானைகளில் சில சிவப்பாகவும், சில கருப்பாகவும் அமைந்திருக்கும். கருப்பு நிறப் பானை ‘கருஞ்சூளைப் பானை’ எனக் குறிப்பிடப்படுகிறது. ஒரு அடுக்கில் நான்கு, ஐந்து பானைகள் அடுக்கி வைக்கப்படும். கூடுதலாகப் பொருட்களைச் சேமிக்க வேண்டுமெனில் ஒரு அடுக்குக்கு அருகில் இன்னொரு அடுக்கு அடுக்கப்படும்.

சோற்றுப்பானை

சோறு வடிப்பதற்கு மண்பானையையே பயன்படுத்தினர். மக்களிடம் இந்த வழக்கம் முற்றிலும் மறைந்து பொங்கல், குலதெய்வப் படையல் ஆகிய நிகழ்வுகளில் மட்டும் மண்பானையில் சோறு சமைக்கும் வழக்கம் காணப்படுகிறது. சோறு வடிப்பதற்கென்று உள்ள பானையே சோற்றுப் பானை எனக் குறிப்பிடப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப சோற்றுப்பானையின் அளவு அமையும். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது பானையில் சோறாக்கிய பழைய

பண்பாட்டின் வெளிப்பாடாகும்.

கூழ்பானை

கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களைக் கூழாக்க தனிப் பானையைப் பயன்படுத்துவர். சோறு வடிக்கும் பானையில் கூழ் கிண்ட முடியாது. பெரும்பாலும் கூழ் கிண்டுவதற்குக் கருஞ்சூளைப் பானையையே பயன்படுத்துவர். வயிறு பெருத்தவர்களைப் பார்த்து “வவுத்தப் பாறன் கூழ்பானையாட்டம்” என்று கூறுவர்.

மாவுபானை

இட்லி, தோசை, ஆப்பம் போன்ற உணவுக்காக முதல் நாள் அரைக்கப்பட்ட மாவைக் கரைத்துப் புளிக்க வைக்கப் பயன்படுத்தப்படும் பானையே மாவுபானை எனக் குறிப்பிடப்படுகிறது.

பால்பானை

இது பேச்சு வழக்கில் ‘பாபானை’ எனக் குறிப்பிடப்படும். பால் காய்ச்சுவதற்குப் பயன்படும் பானை சிறிய வடிவில் அமைந்திருக்கும்.

மோர்பானை

காய்ச்சிய பாலைப் ஊற்றி மோராக்கப் பயன்படும் பானை மோர்பானை எனப்படும். இந்தப் பானையே மோர் கடைவதற்கும் பயன்படுகிறது. இப்பானையை உரியில் வைத்து பாதுகாப்பது வழக்கம்.

கழனிபானை

கழுநீர் பானையே கழனிபானை எனக் குறிப்பிடப்படுகிறது. அரிசி களைந்து கழுநீரை ஊற்றி வைக்கப் பயன்படும் பானையே கழனிபானையாகும். இக்கழுநீரைக் குழம்பு, ரசம் வைக்கப் பயன்

படுத்துவர். புளியையும் கழுநீரிலேயே ஊற வைப்பர்.

தொட்டிப்பானை

சோறு வடித்த கஞ்சி, சாப்பிட்டப் பாத்திரங்களைக் கழுவிய நீர் ஆகியவற்றை ஊற்றி வைப்பதற்குப் பயன்படும் பானையே தொட்டிப்பானை எனப்படும். இதிலுள்ள கழிவு நீர் மாட்டுத் தொட்டியில் ஊற்றப்பட்டுவிடும். வீட்டுத் தோட்டத்தில் (அ) உள்வாசலுள்ள வீடு களில் வாசலில் வைக்கப்பட்டிருக்கும்.

சட்டிகள்

பானைகளைப் போன்றே சட்டிகளிலும் பலவகை உண்டு. குழம்புச்சட்டி, கஞ்சிச்சட்டி, கொத்துச்சட்டி, ஆடசட்டி, ஆப்பஞ்சட்டி, பலாரச்சட்டி எனப் பலவகையான சட்டிகளைப் பயன்படுத்துகின்றனர்.

குழம்புச் சட்டி

குழம்பு சமைப்பதற்குப் பயன்படும் சட்டியே குழம்புச்சட்டி எனக் குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலும் கருஞ்சூளைச் சட்டியையே குழம்பு சமைப்பதற்குப் பயன்படுத்துகின்றனர்.

கஞ்சிச் சட்டி

சோறு வடிக்கும்போது வெளியாகும் கஞ்சியைச் சேமிப்பதற்கென்று ஒரு சட்டியைப் பயன்படுத்துவர். இது கஞ்சிச்சட்டி எனப்படும். புதிதாகச் சட்டி வாங்கினால் அதைச் சமைப்பதற்குப் பயன்படுத்துவதற்காகப் பழக்கவேண்டும். அதற்காகச் சிலர் புதுசட்டியைக் கஞ்சிச்சட்டியாகப் பயன்படுத்திப் பழக்கிய பிறகு குழம்பு சட்டியாகப் பயன்படுத்துவர்.

கொத்துச் சட்டி

பருப்பு, கீரை போன்றவற்றைக் கடைவதற்காக இச்சட்டியைப் பயன்படுத்துவர். இச்சட்டியின் உட்பகுதி சொரசொரப்பாக அமைவதற்காகக் கொத்தப்பட்டிருக்கும். அதனாலேயே கொத்துச் சட்டி எனப்படுகிறது.

ஆடசட்டி

மீந்த உணவுப்பொருட்களைச் (குழம்பு, ரசம்) சுடவைத்துப் பயன்படுத்தும் வழக்கம் மக்களிடம் காணப்படுகிறது. அதற்குப் பயன்படும் சிறு சட்டியை ஆடசட்டி எனக் குறிப்பிடுவர்.

ஆப்பஞ்சட்டி

ஆப்பம் சுடுவதற்குப் பயன்படும் சட்டி ஆப்பஞ்சட்டி எனப்படும். இது மற்ற சட்டிகளைப் போல் குழியாக இல்லாமல் எத்தாக இருக்கும்.

பலார சட்டி

முறுக்கு, அதிரசம், வடை, அப்பளம் போன்றவற்றை எண்ணெயிலிட்டு வேக வைப்பதற்குப் பயன்படும் சட்டியே பலார சட்டி (பலகாரச் சட்டி) எனப்படும். ஆப்பஞ் சட்டியை விட அகலமாகவும், சற்றுக் குழிவாகவும் அமைந்திருக்கும்.

- இரத்தின புகழேந்தி