சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும், தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நிறைவு நாளில் முதல்வர் விஜய் பதிலுரை வழங்கினார். இதையடுத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக இன்று (புதன்கிழமை) சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. காலை 10 மணிக்கு கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில், 2026-27ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். தவெக அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி புதிய அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
நாளை (6ம் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அமைச்சர் வினோத் தாக்கல் செய்ய இருக்கிறார். அடுத்த சில நாட்கள், இரு பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறும். பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து, இன்று பிற்பகல் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அறிவிக்கப்படும்.
பட்ஜெட் மீதான விவாதம் முடிந்தவுடன், தொடர்ந்து துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெற இருக்கிறது. மொத்தம் 55 துறைகள் இருப்பதால், ஒவ்வொரு நாளும் 2, 3 வீதம் எடுத்துக்கொள்ளப்பட்டு, சுமார் 30 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. ஏற்கனவே, தவெக தேர்தல் அறிக்கையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச எல்பிஜி சிலிண்டர்கள், திருமணத்திற்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை, ரூ.20 லட்சம் வரை கல்விக்கடன், குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு, ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் என பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. இதில் ஒரு அறிவிப்பை கூட இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை.
ஏற்கனவே, தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதேபோல், தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற 200 யூனிட் மின்சாரம் ஒரு மாதம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள அறிவிப்புகளில் முக்கியமானவை பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஞர்களின் வேலைவாய்ப்புக்கு ஏதாவது முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இன்றைய பட்ஜெட்டில் விடை கிடைக்கும்.
* முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுமா? எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப திட்டம்
தமிழகத்தில் முதல்வராக விஜய் பதவியேற்ற சுமார் 3 மாதங்களில் ஏராளமான கொலை, பாலியல் குற்றச்சாட்டு, லாக்அப் மரணம் நடந்துள்ளது. நீட்டுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது, அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைத்தது, காவிரி பிரச்னையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அரசு நிராகரித்தது, தொடர்ந்து மின்தடை, புதிய திட்டங்கள் எதுவும் இதுவரை அறிவிக்காமல் இருப்பது, தவெகவினர் தவறு செய்தால் எந்த நடவடிக்கையும் இல்லாமல் அவர்களை காப்பாற்றுவதும், அதே நேரத்தில் எதிர்க்கட்சியினர் தவெக ஆட்சி பற்றியும் முதல்வர் பற்றியும் பேசினால் உடனே கைது செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப திட்டமிட்டுள்ளனர். இதனால், இன்று முதல் சுமார் ஒரு மாதம் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அனல்பறக்கும் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
