சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் தொழில் துறை பயிற்சி மையங்கள் (ஐடிஐ) அமைப்பதற்கு பள்ளிக் கல்வித் துறை தற்போது முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: ஒவ்வொரு பள்ளியிலும் ஐடிஐ அமைப்பதற்கு குறைந்தபட்ச தேவையாக 50 சென்ட் நிலம் இருக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள கட்டிடங்கள் பயன்பாடின்றி அல்லது குறைந்த பயன்பாட்டில் இருந்தால் அத்தகைய பள்ளிகளை தேர்வு செய்யலாம். ஐடிஐ இல்லாத பகுதிகளில் உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதுதவிர தொழில் மண்டலங்கள், தொழில் துறை பகுதிகளுக்கு அருகிலுள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை தரப்படும். இதன்மூலம் தொழில் தொடர்புகள் மற்றும் வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும். இந்த விதிகளின்கீழ் வரும் அரசுப் பள்ளிகளை தேர்ந்தெடுத்து ஒரு வாரத்துக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement


