Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: கடந்த 2016- 2021 ஆண்டு அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர், அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, விருதுநகர் அதிமுக பிரமுகரான விஜய நல்லதம்பி என்பவர் மூலம் மொத்தம் 33 பேரிடம் ரூ.3 கோடி பணம் வசூலிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக ரவீந்திரன் என்பவர் சார்பில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2021ஆம் ஆண்டு ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி விருதுநகர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் 2022ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து ரவீந்திரன் என்பவர் இந்த வழக்கில் காவல்துறையினர் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி கடந்த மாதம் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கொடுத்த நிலையில் இந்த வழக்கை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றியது ஏன்? என்று கேள்வியெழுப்பி வழக்கு விசாரணையை நேற்றைக்கு ஒத்தி வைத்திருந்தது.

மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “முன்னதாக ராஜேந்திர பாலாஜி தொடர்பான வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம் என தெரிவித்திருந்தீர்கள். இதுகுறித்து ஆளுநரிடம் இருந்து ஒப்புதல் பெற என்ன முயற்சி எடுத்தீர்கள்” என்று நீதிபதிகள் கேளவி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், “ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக விசாரணை நடத்த அனுமதிக்கோரி தமிழ்நாடு ஆளுநரிடம் கோப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதன் மீது தற்போது வரை எந்தவித முடிவையும் எடுக்காமல் இருந்து வருகிறார். எனவே இந்த விவகாரத்தில் ஆளுநரை அணுகவும், அவர் அனுமதி வழங்கவும் உச்ச நீதிமன்றம் பரிந்துரையுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

மேலும் லஞ்ச குற்றச்சாட்டு வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான குற்றப்பத்திரிகையும் தயார் செய்யப்பட்டுவிட்டது. ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக தான் எதுவும் விவரிக்க இயலாத சூழலில் நாங்கள் உள்ளோம். இதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வாதங்களை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள்,‘‘ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது” என்று உத்தரவிட்டு, வழக்கு விசரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.