Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கொள்கை முடிவு எடுக்கும்வரை பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது: மீறி ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

மதுரை: தமிழ்நாட்டில் குழு அமைத்து முடிவு எடுக்கும் வரை பைக் டாக்சிக்கு அனுமதியில்லை. மீறி இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஒருவரை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குறிப்பிட்ட வாடகை அடிப்படையில் அழைத்து செல்ல ஆட்டோ, கார் மற்றும் வேன் உள்ளிட்டவை இயக்கப்படுகிறது. வசதி படைத்தவர்கள் கார்களிலும், மற்றவர்கள் ஆட்டோவையும் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

இதற்கு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், குறைவான கட்டணத்தில் செல்ல விரும்புவோருக்காக பைக் டாக்சி சேவை உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.

இந்தியாவில் அதிகாரபூர்வமாக பைக் டாக்சி சேவை, கோவாவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து கடந்த 1988ல் துவக்கப்பட்டது.

இதற்கு ஒன்றிய அரசு மோட்டார் வாகன சட்டப்படி அனுமதி வழங்கியது. கோவாவில் வழங்கப்பட்ட பைக் டாக்சி சேவைக்கு பைலட் என பெயரிடப்பட்டது. குறைந்த கட்டணம், குறுகலான பாதையில் கூட செல்ல முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பைக் டாக்சி சேவைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தனியார் செல்போன் செயலிகள் மூலம் பைக் டாக்சி சேவை அதிகரித்தது.

கடந்த 2019 ஜனவரியில் சென்னை​யில் பைக் டாக்சி சேவை தொடங்​கப்​பட்​டது. தற்ேபாது மாநிலத்தின் பெரும்பாலான முக்கிய நகரங்களில் பைக் டாக்சி சேவை வழங்கப்படுகிறது. இதற்கு ஆதரவு, எதிர்ப்பு, சாதக, பாதகம் என்ற அனைத்துவிதமான பார்வையும் உண்டு. ஒருவர் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும் என்றாலும், ஆட்டோ மற்றும் வாடகை கார்களின் வருவாய் வெகுவாக பாதிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். அதே நேரம் பைக் டாக்சி செயலி மூலம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்கிறது.

இதுதொடர்பாக, மதுரையை சேர்ந்த நவீன் குமார், தமிழ்நாட்டில் பைக், டாக்சி சேவையை முறைபடுத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாட்டில் தனியார் டிஜிட்டல் செயலிகள் மூலம் பைக் டாக்சி சேவைகள் அதிகரித்து வருகின்றன. இவை பலருக்கும் பயனளிக்க கூடிய வகையிலேயே உள்ளன. ஆனால் இந்த சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அரசின் திட்டமோ, விதிகளோ தமிழ்நாட்டில் இல்லை. ஆட்டோ, டாக்சி போன்ற சேவைகளைப் போல பைக் டாக்சி சேவைகள் தனித்து இயங்க முடியாது. இவை முழுமையாக சம்பந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனங்களையே சார்ந்துள்ளன.

ஆனால், அந்நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் எந்த கட்டுப்பாடு இல்லாமல் தங்கள் டிஜிட்டல் தளத்தை இயக்கி வருகின்றன. அதேசமயம் பைக் டாக்சி ஓட்டுநர்கள் மீது அடிக்கடி அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் குற்ற வழக்குகள் பதியப்படுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இதனால், பைக் டாக்சி ஓட்டுநர்கள் தண்டிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, பைக் டாக்சி சேவையை ஒழுங்குபடுத்துவதற்கான ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கவும், சட்டப்படி உரிமம் வழங்கி பைக் டாக்சி சேவையை நடத்த அனுமதிப்பதற்கான விதிகளை உருவாக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். அதுவரை பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், பைக் டாக்சிக்கு அனுமதி வழங்கப்படுமா? வழங்கப்படாதா என்பது தொடர்பான கொள்கை முடிவு குறித்து தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘‘தமிழ்நாட்டில் பைக் டாக்சி சேவைக்கு அனுமதி வழங்குவது குறித்து ஒரு குழு அமைக்கப்படும். அந்த குழு கூடி விவாதித்து தான் முடிவு எடுக்க முடியும். அதுவரை, தமிழ்நாட்டில் பைக் டாக்சி சேவைக்கு அனுமதி கிடையாது. விதிகளை மீறி பைக் டாக்சி ஓட்டி வந்தால் அபராதம் விதிக்கப்படும்’’ என கூறப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘ஏதேனும் விபத்து நடந்தால் என்ன செய்வது?, யார் பொறுப்பு ஏற்பது’’ என்றனர்.

மனுதாரர் தரப்பில், ‘பைக் டாக்சி சேவைக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பிற மாநிலங்களிலும் அனுமதி வழங்க ஆலோசனை வழங்கியுள்ளது. எனவே, பைக் டாக்சி சேவைக்கு மாநில அரசு தடை விதிக்க முடியாது. தேவைப்பட்டால் ஒழுங்குமுறைப்படுத்தலாம்’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், பைக் டாக்சி சேவைக்கு முறைப்படி அனுமதி கொடுக்கலாமா? வேண்டாமா என்பது குறித்து விரைவில் கொள்கைரீதியான முடிவை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் எனக்கூறி அது தொடர்பாக போக்குவரத்து துறை செயலர் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர். இதன்மூலம், தமிழகத்தில் தற்போதைக்கு பைக் டாக்சி சேவைக்கு அனுமதியில்லை, மீறி ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தெளிவாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.