Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம்

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் நேற்று அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக மின்சாரத்துறையும், வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த ராஜகண்ணப்பனுக்கு பொன்முடி வகித்து வந்த வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் ஏற்கெனவே பால்வளத் துறை அமைச்சராக இருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அமைச்சர் மாற்றம் வாக்கு வங்கியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமைச்சர் பதவியில் இருப்பவர்களின் சமூக பிரதிநிதித்துவம் வாக்கு அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் தற்போது கிறித்துவ நாடாரான மனோ தங்கராஜுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமைச்சரவையில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்கள் இருக்கும் நிலையில் தற்போது மனோ தங்கராஜ் உடன் சேர்த்து 4 பேர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. அதேபோல யாதவர் சமூகத்தைச் சார்ந்த ராஜகண்ணப்பனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இலாகா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சார்ந்த முத்துசாமிக்கும், வன்னியர் சமூகத்தைச் சார்ந்த சிவசங்கருக்கும் கூடுதல் இலாகா வழங்கப்பட்டுள்ளது.