தமிழ்நாட்டின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக மிகச்சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் மாநிலத்தின் பொருளாதார வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. 2025-26ம் நிதியாண்டில் தமிழகம் 10.83% என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய சராசரி வளர்ச்சி விகிதமான 7.4 சதவீதத்தை ஒப்பிடுகையில், தமிழகத்தின் இந்த வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாக உள்ளது.
இது தேசிய சராசரியைவிட சுமார் 3.4% அதிகம் ஆகும். கடந்த 2024-25ம் நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமாக இருந்தது. தற்போது, 2025-26ம் நிதியாண்டிலும் 10.83% வளர்ச்சியை எட்டியிருப்பதன் மூலம், தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக தமிழகம் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவுசெய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இதை வெளியிட்டுள்ளது. 2025-26ம் நிதியாண்டில் இந்தியாவிலேயே மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
தமிழகத்தின் இந்த அதிரடி வளர்ச்சிக்கு தொழில்துறை, சேவை துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய மூன்றில் ஏற்பட்ட முன்னேற்றமே முக்கிய காரணம். உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடுகள் மற்றும் மாநில அரசின் தொடர்ச்சியான முயற்சிகளால் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகள் (FDI) உற்பத்தி துறையை வலுப்படுத்தியுள்ளன. ஓசூர் மற்றும் சென்னை பகுதிகளில் மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் விரிவாக்கம் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் `ஒரு டிரில்லியன் டாலர்’ பொருளாதாரமாக மாற்றும் இலக்கை எட்டுவதற்கு ஆண்டுதோறும் 10 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி விகிதம் அவசியமானது. இரட்டை இலக்க வளர்ச்சி முடிவுகள், தமிழ்நாடு அரசு சரியான பாதையில் பயணிப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த வளர்ச்சி விகிதம் வரும் ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதிலும் பெரும் பங்காற்றும்.
குறிப்பாக, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சி, சென்னையை மட்டுமே நம்பியிருந்த நிலையை மாற்றி, மாநிலம் தழுவிய சமமான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. தேசிய அளவில் நிலவும் பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், தமிழ்நாடு காட்டியுள்ள இந்த துரித வளர்ச்சி, மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. ஒன்றிய அமைச்சகத்தின் முழுமையான தரவுகள் வெளியான பிறகு, தேசிய பொருளாதார வரைபடத்தில் தமிழகத்தின் இடம் இன்னும் துல்லியமாக தெரியவரும்.
இதுபற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,“நாங்கள் மூன்று ஆண்டுகள் அடித்தளம் அமைத்து, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இரட்டை இலக்க வளர்ச்சியை வழங்கினோம். தமிழக மக்களே இந்த முன்னேற்றத்திற்கு காரணம். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி. இது வெறும் தொடக்கம்தான். உங்கள் ஆதரவுடன், இந்த வளர்ச்சி மேலும் வேகமெடுக்கும். இந்தியாவை மட்டுமல்ல, இனி தெற்காசியாவை தமிழ்நாடு வழிநடத்தும்” என்று தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். சபாஷ் தமிழ்நாடு...


