‘தமிழ்நாடு தலைகுனியாது’ முதல்கட்டமாக 6 தொகுதிகளில் பரப்புரை' டெல்லி டப்பா கூட்டணி செய்யும் சதி வேலைகள் எதுவும் இங்கு எடுபடாது: திமுக நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை
சென்னை: திமுக தலைமை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் உத்தரவின் பேரில் திராவிட மாடல் அரசின் சாதனைகளையும், ஒன்றிய பாஜ மற்றும் அடிமை என்டிஏ கூட்டணி தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதிகளையும் மக்கள் முன்பு எடுத்துரைக்கும் விதமாக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் “தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையானது நேற்று முதல் முதல் தொடங்கப்பட்டுள்ளது. திமுகவின் 23 நட்சத்திரப் பேச்சாளர்கள் பிப்ரவரி 28ம் தேதி வரை தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரையின் தொடக்க நாளான நேற்று 6 சட்டமன்ற தொகுதிகளில் மிக சிறப்பான முறையில் பரப்புரை நடந்தது.
திருவள்ளூரில் இனிகோ இருதயராஜ், ராயபுரத்தில் திண்டுக்கல் ஐ.லியோனி, திருப்போரூரில் சபாபதி மோகன், நிலக்கோட்டையில் பொன் முத்துராமலிங்கம், கிருஷ்ணராயபுரத்தில் ஏ.கே.எஸ்.விஜயன், ஊத்தங்கரையில் ஆர்.எஸ்.பாரதி என 6 தொகுதிகளிலும் திமுக நட்சத்திரப் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர். மகளிர் உரிமைத் தொகை, விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம் என திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களை மக்கள் முன் எடுத்து வைத்ததோடு, கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியால் பாழ்படுத்தப்பட்ட தமிழ்நாட்டை மீட்டு இன்று இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியுள்ள திராவிட மாடல் அரசின் சாதனைகளும் விளக்கி கூறப்பட்டது.
அதோடு தமிழ்நாட்டுக்கான நிதிப் பகிர்வு குறைப்பு, கல்வி நிதி 3,458 கோடி, 100 நாள் வேலை திட்ட நிதி சுமார் ரூ.2000 கோடி, குடிநீர் இணைப்பு நிதி ரூ.3000 கோடி, பேரிடர் நிதி உள்ளிட்ட எந்த ஒரு நிதியையும் முறையாக விடுவிக்காமல் பொருளாதார ரீதியாக ஒன்றிய அரசு மேற்கொள்ளும் அடக்குமுறை, மூத்தகுடி நாகரிகமான தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் கீழடி அகழ்வாய்வு முடிவை ஏற்க மறுப்பது, தமிழ்மொழியை அழிக்கும் வகையில் இந்தித் திணிப்பு முயற்சி, நமது அரசியல் உரிமைகளை குறைத்து நமது குரல்வளையை நசுக்கும் வகையிலான தொகுதி மறு சீரமைப்பு உள்ளிட்ட ஒன்றிய பாஜ அரசின் வஞ்சக சூழ்ச்சியையும், அதற்கு துணைபோகும் அதிமுகவின் துரோகங்களும் மக்கள் முன் தோலுரித்து காட்டப்பட்டப்பது.
திராவிட மாடல் அரசு தொடர்ந்தால் மட்டுமே மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடரும். அமைதி நீடிக்கும். தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டி, வளர்ச்சியைத் தடுக்க துடிக்கும் டெல்லி டப்பா கூட்டணி செய்யும் சதி வேலைகள் எதுவும் இங்கு எடுபடாது என பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. டெல்லியின் முன் என்றும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என இப்பரப்புரையில் உரக்கச் சொல்லப்பட்டது. 6 தொகுதிகளிலும் மக்கள் திரண்டு பங்கேற்றனர். அந்தந்த தொகுதியின் முக்கிய பிரபலங்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழில் முனைவிவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வணிகர்கள், அரசு திட்டங்களால் பயன்பெற்ற மக்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் இப்பரப்புரையில் தன்னெழுச்சியாக வந்து கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


