மாநில பேரிடர் நிதியில் இருந்து நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட ஒதுக்காதது அம்பலம்!!
மழை, வெள்ள பாதிப்பால் தமிழ்நாட்டில் நவம்பர் 27 வரை 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 870 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் 5,521 கால்நடைகள் உயிரிழந்து விட்டதாகவும் ஒன்றிய அரசு அறிக்கை கூறுகிறது. மொத்தம் 9,000 ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ள ஒன்றிய அரசு, நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டிற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மட்டும் ரூ.276 கோடி வழங்கி இருப்பதாக ஒன்றிய அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார். ஆனால் நாட்டிலேயே அதிக பட்சமாக பாஜக கூட்டணி ஆளும் மராட்டியதற்கு ரூ. 2,984 கோடி பேரிடர் நிதி வழங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்திற்கு ஒரே தவணையில் ரூ.1,748 கோடி நிதி வழங்கி உள்ளது. இப்படி பல்வேறு மாநிலங்களுக்கு நடப்பாண்டில் ரூ.14,878 கோடி நிதி வழங்கிய ஒன்றிய அரசு, மாநில பேரிடர் நிதியில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காதது பாரபட்சமானது என எம்பிக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.