Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிக்கியது தமிழ்நாடு...!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்துக்கு மாற்றாக ஒன்றிய பா.ஜ. அரசு கொண்டுவந்துள்ள விபி ஜி ராம் ஜி திட்டம் நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்திற்கு 95 ஆயிரம் கோடி ரூபாயை இடைக்கால நிதியாக ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், தமிழ்நாட்டிற்கு 7,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான நிதிப்பகிர்வு சதவீதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, கூடுதலாக 5,057 கோடி ரூபாய் நிதியை அளிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய அரசுடன், அந்தந்த மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் நிதி பகிர்வை மேற்கொள்ள வேண்டும். இப்புதிய திட்டத்தின்படி, தமிழக அரசு ரூ.7,585 கோடிக்கு ஆசைப்பட்டு, ரூ.5,057 கோடி நிதியை இழக்க வேண்டியுள்ளது.  இத்திட்டத்தின்படி, வேலை நாட்கள் 100-ல் இருந்து 125 ஆக அதிகரிக்கப்பட்டாலும் மாநிலத்தின் நிதிச்சுமை அதிகரிக்கும் என்பதால், கடந்த திமுக ஆட்சி காலத்தில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், தற்போதைய தவெக அரசு, முந்தைய திமுக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை நீக்கியதால் தமிழ்நாட்டுக்கு தற்போது கூடுதல் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒன்றிய பா.ஜ. அரசின் நிர்ப்பந்தத்துக்கு தமிழக தவெக அரசு பணிந்து போவதால், அடுத்தடுத்து நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. முந்தையை திமுக அரசுபோல் துணிந்து எதிர்க்க முடியாத காரணத்தால், தமிழ்நாட்டின் மீது ஒன்றிய பா.ஜ., அரசின் பாரபட்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் (MGNREGS) என்பது கிராமப்புற ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முக்கிய திட்டமாகும். ஆனால், இந்த திட்டத்தில்கூட தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. இது, வேதனைக்குரியது. 2022-23ம் நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.9,743 கோடி வழங்கிய ஒன்றிய அரசு, அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒதுக்கீட்டை குறைத்து, 2025-26ம் நிதியாண்டில் வெறும் ரூ.7,585 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. அதாவது, கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடிக்கும் அதிகமான நிதியை குறைத்துள்ளது.

இது போதாது என்று புதிய திட்டத்தின் மூலம் மேலும் ஒரு அநீதியை தமிழ்நாட்டின் மீது திணித்துள்ளது. ஒன்றிய அரசு வழங்கும் ரூ.7,585 கோடியை பயன்படுத்த, தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5,057 கோடி நிதியை பங்களிப்பாக கொடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதுவரை இந்த திட்டத்திற்கு மாநில அரசுகள் சுமார் ரூ.1,000 கோடி நிதி மட்டுமே பங்களித்து வந்த நிலையில், இப்போது ஒன்றிய அரசு கூடுதலாக ரூ.4,000 கோடிக்கும் அதிகமாக சுமையை தமிழக அரசு மீது திணித்துள்ளது.

இந்தியாவிலேயே, தமிழ்நாடுதான் அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டின் வரிப்பணத்தை ஒன்றிய அரசு வாங்கிக்கொண்டு, மீண்டும் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பது எந்த வகையில் நியாயம்? என தெரியவில்லை. ஏற்கனவே, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நேரடி அரசு கடன் ரூ.10 லட்சம் கோடியாகவும், பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து மொத்தம் ரூ.13.18 லட்சம் கோடி கடன்சுமை உள்ளதாக தமிழக அரசு சமீபத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட்டது. ஆனாலும், தற்போது ஒன்றிய அரசு விரித்துள்ள வலையில், தமிழக தவெக அரசு சிக்கிக்கொண்டுள்ளது.