தமிழ்நாடு முழுவதும் தெருநாய்களை கட்டுப்படுத்த அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
மதுரை: மதுரை கே.கே. நகரை சேர்ந்த சரவணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாட்டில் தெருநாய்களை முறைப்படி கட்டுப்படுத்தாததால், தினசரி ஏராளமான சிறுவர்கள், முதியவர்கள் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பிற பொதுச்சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், அருள்முருகன் ஆகியோர், ‘‘சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்களால், அப்பகுதியில் உள்ள குழந்தைகள், முதியோர்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் தெருநாய்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்து, உள்ளாட்சி அமைப்புகள், கலெக்டர்கள், உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.