Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கீடு: முதல்வர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சி.வி.சண்முகம், விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து, அவர் ஏற்கனவே வகித்து வந்த தனது மாநிலங்களவை எம்பி பதவியை, மே 7ம் தேதி ராஜினாமா செய்தார். இந்த காலியிடத்துக்கான இடைத்தேர்தல், ஜூன் 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 1ம் தேதி துவங்கியது.

ஜூன் 8ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம், என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 9ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவை திரும்ப பெற ஜூன் 11ம் தேதி கடைசி நாளாகும். இதையடுத்து, வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. போட்டியிருந்தால், அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெற்று, அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் கடந்த திங்கள் காலை 11 மணிக்கு துவங்கிய நிலையில் சுயேச்சை வேட்பாளர்களான தேர்தல் மன்னன் பத்மராஜன் மற்றும் அக்னி ஆழ்வார் ஆகியோர் மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரி தேன்மொழியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். நேற்று மேலும் ஒரு சுயேச்சை வேட்பளார் ஆவடி வி.ஜெயக்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். அரசியல் கட்சிகள் சார்பில் இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை எம்பி பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரீஷ் சோடங்கர் நேற்று பிற்பகல் தலைமை செயலகத்தில் தவெக தலைவரும் முதல்வருமாக விஜய்யை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து நேற்று தவெக கட்சி தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த மாதம் 18ம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, என்று கூறியுள்ளார்.