“தவெக அரசை விமர்சித்ததால் என் வீட்டில் சோதனை நடத்தியுள்ளார்கள்.. சலசலப்புக்கு அஞ்சமாட்டோம்..” -அன்பில் மகேஷ் பேட்டி
திருச்சி: தவெக அரசை விமர்சித்ததால் என் வீட்டில் சோதனை நடத்தியுள்ளார்கள்.. சலசலப்புக்கு அஞ்சமாட்டோம் என திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சொந்தமான சென்னை, திருச்சி உட்பட 6 இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தினர். 8 மணி நேரமாக நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்பில் மகேஷ்; இன்று நடைபெற்ற ரெய்டுக்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும்.
அவர்களுக்கெல்லாம் காலம் வரும்போது நாங்கள் நிச்சயம் பதிலடி கொடுப்போம். இது போன்ற சலசலப்புகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். சோதனையின் போது தான் முழு ஒத்துழைப்பு வழங்கினேன். விசாரணை வரும் 18ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு தனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், தொடர்ந்து மடைமாற்றம் செய்யக்கூடிய வேலையைதான் தவெக அரசு செய்து வருகிறது. எழுதி வச்சுக்கோங்க.. 18-ம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராகி, நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு, நேராக தாராபுரம் சென்று இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை மேற்கொள்வேன்.
இந்த இடைத்தேர்தலில் நிச்சயம் திமுக வெற்றி பெறும். காவல்துறைக்கு சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். விசாரிக்கும்போது முறையாக விசாரிக்க வேண்டும். ஆனால் அதைவிட்டு, விசாரணை என்ற பெயரில் “டார்கெட் நீங்க இல்லைங்க... டார்கெட் அவருதான்.. அவர் பெயரை மட்டும் சொல்லுங்க... விட்டுருதோம்..” என்றெல்லாம் மிரட்டாதீர்கள் என்று கூறினார்.