சென்னை: தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தனது முதல் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன், மாநிலத்தில் 25,000 வாகன மெக்கானிக்குகளை உருவாக்க ரூ.3 கோடியில் பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார்.
இவர்களுக்கு பேட்டரி பராமரிப்பு, மின்சார வாகன பராமரிப்பு பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.10 கோடி ஆரம்ப மூலதனத்துடன் TNSHIC சிறப்பு நோக்கு நிறுவனம் அமைக்கப்படும். ரூ.10 கோடி செலவில் மாணவர் தங்கும் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு கழகம் அமைக்கப்படும். இதனிடையே திமுக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் பெயரை வெற்றி மடிக்கணனி திட்டம் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது தவெக அரசு. கடந்த ஆண்டு திமுக அரசு ஒதுக்கியதை போலவே ரூ.2,000 கோடி ஒதுக்கி உள்ளது ஆளும் அரசு. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்கு ரூ.1,051 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. 20231-ஆம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ.2,022 கோடி நிதியும், சமூக நீதித்துறைக்கு ரூ.3,937 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மரிய வில்சன் குறிப்பிட்டுள்ளார். சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு ரூ.17,150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடி திட்டத்திற்கு ரூ.165 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக ரூ.1,700 கோடி நிதியும், மாற்று திறனாளிகளின் நலனுக்காக ரூ.1,485 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


