உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை
சென்னை: கொளத்தார் ஜம்புலிங்கம் பிரதான சாலை, 31வது தெரு ஜிகேஎம் காலனியை சேர்ந்த பி.முரளி (50). இவர் கடந்த 15ம் ேததி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். முன்னதாக மூளைச்சாவு அடைந்த முரளியின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக விருப்பம் தெரிவித்தனர். குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் முரளியின் கல்லீரல் தானமாக அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையின்படி உடல் உறுப்பு தானம் செய்த முரளியின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாவட்டம், மத்திய சென்னை வருவாய் கோட்ட அலுவலர், எழும்பூர் வட்டாட்சியர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இந்நிகழ்வில் மத்திய சென்னை வருவாய் கோட்ட அலுவலர் சதீஷ்குமார், எழும்பூர் வட்டாட்சியர் பார்த்திபன் மற்றும் காவல் துறையினர் உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.