Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தொடர் மழையால் சாகுபடி பாதிப்பு; வெங்காயம், உருளைக்கிழங்கு விலை 50% உயர்வு

புதுடெல்லி: தொடர் மழையால் சாகுபடி பாதிப்பு ஏற்பட்ட நிலையில், வெங்காயம், உருளைக்கிழங்கு விலை 50% உயர்ந்துள்ளது. அதேபோல் தக்காளி விலையும் அதிகரிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய காய்கறிகளான வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நடப்பு மாதத்தில் (செப்டம்பர்) இதுவரை இல்லாத அளவிற்கு வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலை உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 50% அதிகரித்துள்ளது.

காய்கறிகள் விலை உயர்வுக்கு நாட்டின் சில பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் அதன் காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளன என்று கூறப்படுகிறது. ஒன்றிய நுகர்வோர் விவகார அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, தக்காளி விலை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 14% அதிகரித்துள்ளது. இன்றைய நிலையில் கிலோ ரூ. 70 வரை விற்கப்படுகிறது. வெங்காயத்தின் விலை 11% அதிகரித்து ஒரு கிலோ ரூ.50ஐ தாண்டியுள்ளது. அதேபோல் உருளைக்கிழங்கின் விலையும் கிலோ ரூ. 60 வரை விற்கப்படுகிறது. இதுகுறித்து எலாரா செக்யூரிட்டீஸ் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் கரிமா கபூர் கூறுகையில், ‘வெங்காயம் மீதான ஏற்றுமதி வரி நீக்கப்பட்ட பிறகு, அதன் விலை அதிகரித்துள்ளது.

தக்காளி அதிகம் விளையும் தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பெய்த தொடர் மழையால், விவசாயம் பாதிக்கப்பட்டு பயிர்கள் சேதம் அடைந்துள்ளது’ என்றார். நாடு முழுவதும் கடந்த 18ம் தேதி வரை பெய்த மழையானது, இந்த பருவத்திற்கான நீண்ட கால சராசரியை விட 7% அதிகமாக உள்ளது. அதேசமயம் நீண்ட கால சராசரியை விட வாராந்திர மழை 7% குறைவாக இருந்தது. வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அதிக மழை பெய்துள்ளது. தற்போது மொத்த விதைப்பு பரப்பளவு 1,096.7 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது என்று வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.