மேலூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து மூதாட்டி பலி; 2 பேர் படுகாயம்
மேலூர்: மேலூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர். தூத்துக்குடி பனையூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (65). இவரது மனைவி தனசெல்வி (60). இவர்கள் தற்போது சென்னை மணலியில் குடும்பத்தோடு வசிக்கின்றனர். இந்நிலையில், நேற்றிரவு கோபாலகிருஷ்ணன், தனது மனைவி தனசெல்வியோடு காரில் தூத்துக்குடி புறப்பட்டார். காரை மணலி சின்னமாத்தூரை சேர்ந்த கார்த்திக் (27) என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் மதுரை-திருச்சி நான்குவழிச்சாலையில் மேலூர் அருகே தாமரைப்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த மேலூர் போலீசார் விபத்தில் சிக்கிய மூவரையும் மீட்டு மேலுர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால், வரும் வழியிலேயே தனசெல்வி பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன், கார்த்திக் ஆகியோருக்கு மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து மேலூர் எஸ்ஐ பழனியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.