சென்னை: நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படம் 2012ம் ஆண்டு வெளியானது. 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது கும்கி 2 படத்தை பிரபு சாலமன் தயாரித்து இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கும்கி 2 படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கும்கி 2 படத்தை தயாரிக்க 2018ம் ஆண்டு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் கடன் பெற்ற பிரபு சாலமன், கும்கி 2 படம் வெளியீட்டுக்கு முன்பு பணத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பி தந்து விடுவதாக ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால், வட்டியுடன் சேர்த்து 2 கோடியே 50 லட்சம் ரூபாயை திருப்பித் தராமல், நவம்பர் 14ம் தேதி படத்தை வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, ஒப்பந்ததை மீறி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதனால், மனுதாரருக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, கும்கி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
